நகர்ப்புற நிலங்களின் வில்லங்க விபரங்களை பொதுமக்கள் எளிதாக பெற கூடுதல் வசதி; பதிவுத்துறை நடவடிக்கை
சென்னை: நகர்ப்புற நிலங்கள், சொத்துக்களின் வில்லங்க சான்றிதழ் விபரங்களை, பொதுமக்கள் எளிதாக அறிவதற்காக கூடுதல் வசதியை இணைத்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதன் முந்தைய பரிமாற்ற விபரங்களை, வில்லங்க சான்றிதழ் வாயிலாக அறியலாம். இதில், ஒரு சொத்தின் பின்னணியை சரிபார்க்க, 30 ஆண்டு களுக்கு வில்லங்க சான்றிதழ் தேவை. தற்போது, வில்லங்க சான்றிதழ் பெற விரும்புவோர், சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதும். குறிப்பிட்ட நாட்களில், 'இ - மெயில்' முகவரிக்கு, வில்லங்க சான்றிதழ் கிடைத்து விடும். இதில், ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்தி, வில்லங்க சான்று வாங்க வேண்டுமா என்று தவிப்போருக்காக, 'ஆன்லைன்' முறையில், வில்லங்க விபரங்களை மக்கள் இலவசமாக பார்க்கும் வசதியை, பதிவுத்தறை வழங்கி வருகிறது. சொத்து குறித்த முதல்கட்ட சரிபார்ப்புக்கு இது பேருதவியாக உள்ளது. எனினும், சர்வே எண் மற்றும் ஆவண எண் அடிப்படையில் மட்டுமே, இந்த வசதியை பயன்படுத்தும் சூழல் இருந்தது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ம னை எண், வீட்டு எண் அடிப்படையிலும், வில்லங்க விபரங்கள் தேடும் வசதி அறிமுகமானது. இதில், நகர்ப்புற நிலங்கள் குறித்த வில்லங்க விபரங்களை பார்க்க, கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர்ப்புற நில அளவை முடிந்த பகுதிகளில், நிலங்கள், 'ப்ளாக், வார்டு' அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. இந்த நிலங்களை, பழைய சர்வே விபரங்கள் அடிப்படையில் தேடும்போது, உரிய விபரங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகர்ப்புற நிலங்களை, 'பிளாக், வார்டு எண்' அடிப்படையிலும் தேடுவதற்கான வசதி, இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், நகர்ப்புற நிலங்கள், சொத்துக்கள் குறித்த வில்லங்க விபரங்களை, பொதுமக்கள் எளிதாக பெற வழி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.