உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அமைச்சர் பாராட்டு

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அமைச்சர் பாராட்டு

சென்னை:சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 'உலகளாவிய ஆயுர்வேத புதுமைகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்' என்ற தலைப்பில், சர்வதேச மாநாடு நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன், 150 ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு நுாலை வெளியிட்டார். பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி போன்ற இந்திய மருத்துவ துறைகள், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன. நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியில், ஆயுர்வேதா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இதில் 3.5 கோடி ரூபாயில், புதிய கட்டடம் கட்டப்படுகிறது.ஆயுர்வேத துறையில், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, ரசசாஸ்திரம், திரவியகுணம் என்ற இரண்டு பாடப்பிரிவுகளுக்கு கீழ், ஐந்து இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை எனக்கூறி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பதை பாராட்டுகிறேன்.மருத்துவமனையில், கடந்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அந்த மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே, அ.தி.மு.க., ஆட்சியில் செய்தது, தி.மு.க., ஆட்சியில் செய்தது என, இரண்டையும் ஒப்பீடு செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ