உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தத்கால் டிக்கெட் முன்பதிவின்போது ரயில்வே செயலியில் குவியும் விளம்பரம்

தத்கால் டிக்கெட் முன்பதிவின்போது ரயில்வே செயலியில் குவியும் விளம்பரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தத்கால்' டிக்கெட் முன்பதிவின்போது, ஐ.ஆர்.சி.டி.சி., செயலியில் குவியும் விளம்பரங்களால், அடிக்கடி 'சர்வர்' பாதிக்கப்படுகிறது. இதனால், டிக்கெட் முன்பதிவின்போது பயணியர் அவதிப்படுகின்றனர்.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில், பயணியர் டிக்கெட் முன் பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ஐ.ஆர்.சி.டி.சி., தளத்தில் முன்பதிவு செய்கின்றனர். உணவு 'ஆர்டர்' செய்வது, 'வீல் சேர்' முன்பதிவு உட்பட பல்வேறு கூடுதல் வசதிகளுடன், இந்த இணையதளம் செயல்படுகிறது. விடுமுறை, பண்டிகை நாட்களில், ரயில்களில் டிக்கெட் எடுக்க, கடும் போட்டி ஏற்படுகிறது. குறிப்பாக, தத்கால் முன் பதிவின்போது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் டிக்கெட் எடுக்க முயற்சிப்பதால், அடிக்கடி, 'சர்வர்' பிரச்னை ஏற்படுகிறது. தற்போது, செயலியில் விளம்பர வீடியோ, 'போஸ்டர்'கள் அதிகளவில் இடம்பெறுவதால், தினமும் சர்வர் பாதிக்கப்பட்டு, முன்பதிவில் சிரமம் ஏற்படுகிறது.

இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில், அதிகளவில் விளம்பரங்கள் வருகின்றன. மொபைல் போனில் செயலி வாயிலாக முன்பதிவு செய்யவே சிரமமாக இருக்கிறது. முன்பதிவை துவங்கும்போது, 3 முதல் 5 டிக்கெட்டுகள் இருப்பதாக காட்டுகிறது. முன் பதிவு செய்ய துவங்கினால், சர்வர் பிரச்னை என தகவல் வருகிறது. சில நேரங்களில் 'பேமென்ட் பெயில்' என காட்டுகிறது. சில நிமிடங்களுக்குள், முன்பதிவு முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்து விடுகிறது. ஆனால், பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுவே, 'பிரீமியம் தத்கால்' டிக்கெட்டுக்கு ஒரு நிமிடம் தாமதம் ஏற்பட்டாலும், 10 சதவீதம் கட்டண தொகை கூடுகிறது. இதனால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, ஐ.ஆர்.சி.டி.சி., சர்வர் வேகத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில், தத்கால் நேரத்தில், செயலியில் குவியும் விளம்பரங்களை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:

சர்வர் வேகம் அதிகரிக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தை மேம்படுத்த உள்ளோம். சில நேரங்களில் மொபைல் போன் நிறுவனங்களாலும், வங்கிகளின் சர்வர் பிரச்னையாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து, வங்கி, டெலிகாம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.செயலியில் விளம்பரங்கள் அதிகமாக வருவது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூலை 20, 2025 09:36

பணத்தாசை பிடித்த பேய் இந்த ஐ.ஆர்.சி.டி.சி. இவங்க கிட்டே கமிஷன் வாங்குது ஒன்றிய அரசு.


RAAJ68
ஜூலை 20, 2025 08:56

பயணிகளிடம் கொள்ளையடிக்கும் தட்கல் சிஸ்டம் ஒழிய வேண்டும்.


RAAJ68
ஜூலை 20, 2025 08:54

ஒரு விளம்பரத்தை மூடினால் அடுத்த விளம்பரம் உடனே வந்து விடுகிறது. டிக்கெட் புக் செய்யும் வேறு சில நிறுவனங்களும் இடையே குறுக்கீடு செய்கிறது. நம்மை அறியாமல் தொட்டுவிட்டால் நம்மை எங்கேயோ கொண்டு செல்கிறது பிறகு தான் புரிகிறது அது ஐ ஆர் சி டி சி யின் மறைமுக ஏற்பாடு என்று.


RAAJ68
ஜூலை 20, 2025 08:50

cross mark கண்ணுக்கு தெரியவே தெரியாது அப்படி ஒரு மோசடி. தவறுதலாக நம் விரல் பட்டுவிடும் அப்போது விளம்பரம் முன்னிலைப்படுத்தப்பட்டு முன்பதிவுத்திரை காணாமல் போய்விடும். வேண்டுமென்றே பயணிகளை சிரமப்படுத்தும் வேலையை ரயில்வே செய்து கொண்டுள்ளது.


Padmasridharan
ஜூலை 20, 2025 08:33

ஒன்றல்ல இரண்டல்ல மூன்றுக்கும் மேல் விளம்பரங்கள் இவற்றை மூடுவதற்கு கிராஸ் மார்க்கை தேடி கண்டுபிடித்து மூடி நமக்கு வேண்டியதை பார்க்கவோ /படிக்கவோ நேரம்/data அதிகம் செலவாகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை