சென்னை: ''நான் தவறு செய்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம் ஒரு கூட்டத்தின் வாயிலாக மன்னிப்பு கேட்டார் அவரது மகன் அன்புமணி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u2qq33jq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராமதாசின் முயற்சிகளை முறியடித்து, கட்சியின் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் நிலையில், சமரச முயற்சியாக, இந்த வேண்டுகோளையும் விடுத்துள்ளார். பா.ம.க., சார்பில், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மணவாள நகரில் நேற்று நடந்தது. பத்து உரிமைகள்
திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி, அம்பத்துார், கும்மிடிப்பூண்டி, மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர் சட்டசபை தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதில், அன்புமணி பேசியதாவது:
பா.ம.க., சமூக நீதிக்காக துவக்கப்பட்டது. நம்மை ராமதாஸ் வழி நடத்திக் கொண்டிருக்கிறார். நாம் இன்னும் வெகுதுாரம் செல்ல வேண்டும். தமிழகம் முழுதும் நடை பயணம் செல்ல உள்ளேன். ராமதாஸ் பிறந்த நாளில் பயணத்தை துவக்க இருக்கிறேன். தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்கான பயணம் அது. 10 உரிமைகளை முன் வைத்து நடைபயணம் செல்கிறேன். தி.மு.க., ஆட்சியின் முடிவுக்கு, 'கவுன்ட் டவுன்' துவங்கி விட்டது. அழிப்பது ஏன்?
திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் கட்ட உள்ளனர். முப்போகம் விளையும் மண்ணை பிடுங்கி, அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளனர்.அந்த மையத்தை, தரிசு நிலம் அதிகம் உள்ள ராமநாதபுரத்தில் அல்லது திருவண்ணாமலையில் கட்டலாம். அதை விட்டுவிட்டு, விவசாய நிலங்களை அழிப்பது ஏன்? தமிழக அரசுக்கு மணல் குவாரிகள் வாயிலாக, ஆண்டுக்கு 27 கோடி ரூபாய் வருவதாக கணக்கு காட்டுகின்றனர். ஒரு குவாரியில், நான்கு நாட்களில், 27 கோடி ரூபாய் வந்து விடும். அமலாக்கத்துறை விசாரணையில், ஆறே மாதத்தில், 4,800 கோடி ரூபாய் ஊழல் என்று தெரிவித்தனர்.மொத்தமாக பார்க்கும் போது, 60,000 கோடி ரூபாய் வரை மணல் குவாரிகளில் ஊழல் நடக்கிறது. முதல்வரால் காவல் துறையை கவனிக்க முடிய வில்லை என்றால், வேறு யாரிடமாவது கொடுக்கலாம். ராணிப்பேட்டையில் பா.ம.க., முக்கிய நிர்வாகி, சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். மோசமான மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. ராமதாஸ் உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன், நுாறாண்டுகள் வாழ வேண்டும். நான் தவறு செய்து இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். பத்தாண்டுகளுக்கு முன், ராமதாசுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. தற்போது அவருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அவர் டென்ஷன் ஆகக்கூடாது. என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவராக, அதை நான் செய்து முடிக்கிறேன். இது, நீங்கள் உருவாக்கிய கட்சி. எனவே வருத்தப்படாதீர்கள். கோபப்படாதீர்கள். உங்கள் கனவுகளை நாங்கள் நிறைவேற்றுவோம். கடந்த, 45 ஆண்டு காலமாக, இந்த சமுதாயத்திற்காக நீங்கள் உழைத்து இருக்கிறீர்கள். தற்போது நீங்கள் தேசிய தலைவர். இந்தியாவிலேயே மூத்த தலைவர் ராமதாஸ் என, பிரதமர் மோடியே கூறினார். அந்த மதிப்பும், மரியாதையும் எல்லோருக்கும் இருக்கிறது.இவ்வாறு அன்புமணி பேசினார்.
தியாக தீபம்
உலக தந்தையர் தினத்தையொட்டி, பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. 'தந்தையர் நாளில் மட்டுமின்றி, எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்' என தெரிவித்துள்ளார்.வடிவேல் ராவணன் நீக்கம்
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், தன் ஆதரவு நிர்வாகிகளுடன் பா.ம.க., நிறுவனர்
ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அவரால் புதிதாக நியமிக்கப்பட்ட, 42 மாவட்ட செயலர்கள், 33 மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ல் நடக்கும் மகளிர் சங்க மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், இன்று தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், ராமதாஸ் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டங்கள் முடிந்ததும், பொதுக்குழுவை கூட்டும் முடிவில் ராமதாஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கேற்றவாறு, கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து வடிவேல் ராவணனை நீக்கி விட்டு, முரளி சங்கர், 35, நியமிக்கப்படுவதாக ராமதாஸ் நேற்று அறிவித்தார். அன்புமணி ஆதரவாளராக வடிவேல் ராவணன் மாறியதால், இந்த முடிவை ராமதாஸ்
எடுத்துள்ளார்.