26,883 சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய தீர்மானம் அன்புமணி வேண்டுகோள்
சென்னை:'தமிழகத்தின் 26,883 சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்யக்கோரி, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:உலக தண்ணீர் நாளை ஒட்டி, வரும் 29ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடக்கவுள்ளது. அதில், நீர் நிலைகளை காக்க, 2017ம் ஆண்டு சதுப்பு நில விதிகளின் கீழ் அறிவிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இயற்கை வளங்களில், சதுப்பு நிலங்கள் மிகவும் முதன்மையானவை. சதுப்பு நிலங்கள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கின்றன; வெள்ளத்தைக் கட்டுப்படுத்துகின்றன; மாசுக்களை கட்டுப்படுத்துகின்றன; மண் அரிப்பைத் தடுக்கின்றன; மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்துகின்றன; மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கின்றன. தமிழகத்தில் மொத்தம், 42,978 சதுப்பு நிலங்கள் உள்ளன. பெருவாரியான சதுப்பு நிலங்கள் பயனற்ற நிலங்களாக உருமாற்றப்பட்டு உள்ளன. திடக்கழிவுகள், கழிவு நீர், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கேடுகளால் நாசமாக்கப்பட்டு உள்ளன.சழ்துப்பு நில விதிகளின் கீழ், அவை சதுப்பு நிலமாக சட்டப்படி அறிவிக்கை செய்யவில்லை. ஊரின் நீர் நிலைகளும் இவ்வாறு அறிவிக்கை செய்யப்படவில்லை. 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளை, மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து, தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், நாளை மறுநாள் நடக்கும் கிராம சபை கூட்டத்தில், அந்தந்த ஊராட்சிகளின் நீர்நிலைகளை, 2017ம் ஆண்டு சதுப்பு நில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.