ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பழங்கால கணித முறை சேர்ப்பு
சென்னை: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டுள்ள, ஏழாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில், பழங்கால இந்திய கணித முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து என்.சி.இ.ஆர்.டி., அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக, அறிவியல், கணிதவியல் சார்ந்த புரிதல், மேலை நாடுகளில் இருந்து நமக்கு வந்ததாக, நம் மாணவ - மாணவியரிடம், தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனால், அடிமை மனப்பான்மை ஏற்பட்டு, நமக்கென்று தொழில்நுட்ப அறிவோ, புரிதலோ இல்லை என்ற எண்ணம் நிலவுகிறது. அதிலிருந்து நம் மாணவர்களை மீட்கவும், அவர்களுக்கு சுயசார்பு சிந்தனையை ஊட்டவும், புதிய கல்வி கொள்கையின்படி, அவ்வப்போது பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஏழாம் வகுப்பு கணிதப் பாடத்தின் இரண்டாம் பருவத்துக்கான புத்தகத்தில், இயற்கணிதம் என்ற அல்ஜிப்ரா பகுதி, இந்தியர்களால் உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பழமையான சமஸ்கிருத நுால்களில் இருந்து, வடிவியல் சார்ந்த உதாரணங்களும் விளக்கப்பட்டுள்ளன. முழு எண்கள் குறித்த பாடத்தில், ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்த பிரம்மகுப்தரின் பிரம்மஸ்புட சித்தாந்தத்தின் வாயிலாக, நேர்மறை மற்றும் எதிர்மறை எண்களின் பெருக்கல் மற்றும் வகுத்தல் விதிகள் விளக்கப்பட்டு உள்ளன. அதேபோல, 'பிஜ கணிதா' நுாலில் இருந்து, இயற்கணித சமன்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. மேலும், எட்டாம் நுாற்றாண்டில், அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இந்திய கணித நுால்கள், இந்திய கணிதவியலாளர்கள் குறித்த விபரங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த 12ம் நுாற்றாண்டின் கணித மேதை பாஸ்கராச்சார்யாவின் பிஜகணித உரை சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோல, பல்வேறு கணித பாரம்பரிய வழிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், மாணவ - மாணவியரின் மனதில் இருந்து காலனிய சிந்தனை அகலும். இவ்வாறு அவர்கள் கூறினர்.