பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
சென்னை:பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.சேலம் - மதுரை சரக பதிவுத்துறைடி.ஐ.ஜி., ரவீந்திரநாத், 57. இவர், 2021ல் தென்சென்னை மாவட்ட பதிவாளராக இருந்தார். அப்போது, பெருங்களத்துாரில் கலைவாணி என்பவருக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் வாயிலாக பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலக உதவியாளராக பணியாற்றிய லதா உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். பின், ஜாமினில் வெளியே வந்த லதா, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், டி.ஐ.ஜி., ரவீந்திரநாத், 25ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தாம்பரம் வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு, போலியான ஆவணங்கள் வாயிலாக மாற்றுவதற்கு ரவீந்திரநாத் உடந்தையாக இருந்தது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இந்த முறைகேட்டிலும், ரவீந்திரநாத் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ததற்கான ஆவணங்களை, புழல் சிறை அதிகாரிகளிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழங்கி உள்ளனர்.