உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி வழக்கு உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற ஊழல் எதிர்ப்பு இயக்கம்

செந்தில் பாலாஜி வழக்கு உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற ஊழல் எதிர்ப்பு இயக்கம்

புதுடில்லி : செந்தில் பாலாஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எண்ணிக்கையை 47ல் இருந்து 2,200 ஆக அதிகரிக்க அனுமதி அளித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2015ல் தமிழக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி நடந்ததாக வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தது. ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் ஜாமின் வழங்கியது. இதையடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானார்.அவர் மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.சமீபத்தில் தமிழக மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் போக்குவரத்து துறையின் அதிகாரிகள், ஊழியர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் என 2,200க்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டுகளை பதிவு செய்தது. இந்த ஊழல் வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி தந்தது.இந்நிலையில், 2,200க்கும் மேற்பட்டோரை செந்தில் பாலாஜி வழக்கில் இணைக்க அனுமதித்த, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.அந்த மனுவில், 'செந்தில் பாலாஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை 47ல் இருந்து 2,200க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் வழக்கு விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும்' என கூறியுள்ளனர்.இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர், வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் கோரும் படி பரிந்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

joe
டிச 10, 2024 17:13

இந்த செந்தில் பாலாஜி ஒரு கரூர் ஊழல்வாதி .இன்னும் கரூரில் பல ஊழல் அரசியல் வாதிகள் இருக்கிறார்கள் .இவர்கள் ஊழலுக்கு அடிப்படை ஆணிவேரே கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகமே .100% ஊழல் இங்கிருந்துதான் செந்தில் பாலாஜியால் செய்ய முடிந்திருக்கிறது .- செய்திருக்கிறார் .எனவே ,இந்த ஊழல்வாதியை தூக்கி உள்ளே வையுங்கள் .பொருளாதார குற்ற வாளிகளுகளுக்கு நீதி துறை தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது .


Ramesh Sargam
டிச 10, 2024 11:35

இந்த வழக்கு நம் வாழ்நாளில் முடிவுக்கு வராது. செந்தில் பாலாஜி மற்றும் அவர் கூட்டாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்போவதில்லை நம் வாழ்நாளில். இதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை