முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ., என, அ.தி.மு.க., 'மாஜி'க்களின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், 2016 முதல் 2021 வரை அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார்.இந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அதன்படி, வேலுார் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் தலைமையில், வேலுார் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று காலை, 6:00 மணி முதல், சேவூர் ராமசந்திரன் வீடு மற்றும் தனியாக வசிக்கும் அவரது மகன்கள் விஜயகுமார், சந்தோஷ் ஆகியோரது வீடுகளில் தனித்தனி குழுவாக சோதனை நடத்தினர். கார் ஷெட்டிலும் சோதனை நடந்தது.தகவலறிந்து, ரெய்டு நடந்த வீடுகளின் முன், அ.தி.மு.க., தொண்டர்கள் குவிந்தனர். கொட்டும் மழையில், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். நேற்று மாலை, 5:30 மணி வரை சோதனை தொடர்ந்த நிலையில், சேவூர் ராமச்சந்திரன், 2016- 2109 கால கட்டத்தில், 8 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக, 125 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக கண்டறிந்தனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் 5 கிலோ வெள்ளி, 2 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவற்றை வாங்கியதற்கான ஆவணங்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.அதே போல, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., நீதிபதி வீட்டிலும் நேற்று ரெய்டு நடந்தது. உசிலம்பட்டி, அண்ணா நகரில் வசிக்கும் நீதிபதி, ஒரு முறை ஒன்றிய கவுன்சிலர், ஒன்றியக்குழு துணைத்தலைவர், இரண்டு முறை மாவட்ட கவுன்சிலர், 2016 -- 2021 வரை உசிலம்பட்டி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். தற்போது உசிலம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க., செயலராக உள்ளார். எம்.எல்.ஏ.,வாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நீதிபதி, அவரது மனைவி ஆனந்தி, மகன் இளஞ்செழியன் மீது சந்தைப்பட்டி கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று காலை முதல் மாலை வரை லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான போலீசார், நீதிபதி வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை எடுத்துச்சென்றனர். நீதிபதி எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, 2020 டிசம்பரில் முருகன் என்பவரிடம், ஒரு பணப்பெட்டி கொடுத்து வைத்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. அதில் 44 லட்சம் ரூபாய் குறைவாக இருந்ததாக கூறி முருகனையும், அவரது மனைவி சுகந்தியையும் நீதிபதி அடித்து துன்புறுத்தியதாக முருகனின் தந்தை ராமர் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரை போலீசார் விசாரிக்கும் முன்பே இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, 'டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதால், பயத்தில் என்ன செய்வதென தெரியாமல், ஸ்டாலின் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இதுபோன்ற சோதனைகளால் அ.தி.மு.க.,வை அசைத்து கூட பார்க்க முடியாது' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். - நமது நிருபர் குழு -