உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடுப்பூசி இலக்கை அடைய மதிப்பெண் முறை அமல்

தடுப்பூசி இலக்கை அடைய மதிப்பெண் முறை அமல்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தவணைகளுக்கான இலக்கை அடைய, சுகாதார மாவட்டங்களுக்கு, மதிப்பெண் அளிக்கும் முறையை, பொது சுகாதாரத்துறை அமல்படுத்தி உள்ளது.குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் தவணை தவறாமல் செலுத்தப்படுவதை கண்காணித்து, மாவட்ட செயல்பாடுகளை ஊக்கப்படுத்த, புதிய அணுகுமுறையை பொது சுகாதாரத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஆண்டு தோறும், 9.40 லட்சம் குழந்தைகளுக்கு, 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட, 11,000 இடங்களில், தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஒவ்வொரு தவணைக்கும், குறிப்பிட்ட இடைவெளி உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில், இதுகுறித்த புரிதல் இல்லாத பெற்றோர், உரிய நேரத்தில் தடுப்பூசி போடுவதில்லை. இதனால், 100 சதவீத இலக்கை அடைவதில் சிக்கல் உள்ளது. இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவினர், 90 முதல் 95 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடையும் மாவட்டங்களுக்கு ஐந்து மதிப்பெண்; 95 சதவீதத்துக்கும் மேலான இலக்கை அடையும் மாவட்டங்களுக்கு, 10 மதிப்பெண் வழங்குவர்; 90 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்கள், மதிப்பெண் பெறாதவையாக கருதப்பட்டு, இலக்கை அடைய சிறப்பு கவனம் செலுத்தப்படும். இந்த முறை தற்போது அமலாகி உள்ளதாக, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ