சென்னை ஐகோர்ட் நீதிபதியின் பணியிட மாற்றத்துக்கு ஒப்புதல்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய கொலீஜியம் அளித்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கான பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு அளித்து வருகிறது. தலைமை நீதிபதியின் தலைமையிலான இந்த கொலீஜியம் கூட்டம், கடந்த ஆகஸ்ட் 25 மற்றும் 26ல் நடந்தது. அப்போது, நாடு முழுதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள நிஷா பானுவை கேரளா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்புதலை மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதேபோல டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்ற வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கும் ஜனாதிபதி நேற்று ஒப்புதல் வழங்கினார். - டில்லி சிறப்பு நிருபர் -