கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் கிராமுக்கு ரூ.7,000 வழங்க ஒப்புதல்
சென்னை:கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக் கடனாக, கிராமுக்கு, 7,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் மாநில, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன், நகைக் கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. தங்க நகை அடமானத்திற்கு கிராமுக்கு, 6,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. தற்போது, சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் விலை, 11,800 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. எனவே, கூட்டுறவு வங்கிகளில் தங்கத்திற்கு அதிக தொகை கடன் வழங்குவது குறித்து முடிவெடுக்க, கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் சமீபத்தில் கூட்டம் நடத்தினர். அதில், நகைக் கடனுக்கு கிராமுக்கு 7,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்ததும், நகைக் கடனுக்கான புதிய தொகை, அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.