மதுரையில் ஏ.பி.வி.பி., ஊர்வலம் நடத்தலாம்: உயர்நீதிமன்றம் அனுமதி
மதுரை : மதுரையில் இன்று ஏ.பி.வி.பி.,மாணவர் அமைப்பின் ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதித்தது.அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,)தென்தமிழக பொருளாளர் சிவகுமார் தாக்கல் செய்த மனு:ஏ.பி.வி.பி.,தென் தமிழக மாநில மாநாடு மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பிப்.7 ல் துவங்கி பிப்.9 வரை நடைபெறுகிறது. மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பங்கேற்கின்றனர். இன்று (பிப்.8) மாலை 4:00 முதல் 5:00 மணிவரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியிலிருந்து பழங்காநத்தம் ரவுண்டானாவரை ஊர்வலம், பின் பொதுக்கூட்டம் நடத்த திடீர் நகர் உதவி கமிஷனருக்கு மனு அனுப்பினோம்.அவர், 'அப்பகுதியில் சாலை விரிவாக்கம், நடுவில் தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. ஊர்வலத்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும். பிப்.9 ல் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே ஒரு அமைப்பின் உண்ணாவிரதத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்.8ல் முன்னேற்பாடுகள் செய்ய உள்ளனர். ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது,' என உத்தரவிட்டார். அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.தனபால் விசாரித்தார்.அரசு தரப்பு: மனுதாரர் கோரும் பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதிப்பதில்லை. மாற்றாக ராஜா முத்தையா மன்றம்- காந்தி மியூசியம் அல்லது தமுக்கம்- காந்திமியூசியம் ரோடு பகுதியில் ஊர்வலத்திற்கு அனுமதிக்கலாம்.மனுதாரர் தரப்பு: மன்னர் கல்லுாரி முதல் திருநகர் சந்திப்புவரை ஊர்வலத்திற்கு அனுமதிக்கலாம்.அரசு தரப்பு: அப்பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணி நடக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: ராஜா முத்தையா மன்றம் முதல் காந்தி மியூசியம்வரை இன்று (பிப்.8) மதியம் 3:30 முதல் 4:30 மணிவரை ஊர்வலம் நடத்தலாம் அல்லது பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாலை 5:00 முதல் 6:30 மணிவரை பொதுக்கூட்டம் நடத்தலாம். இதில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம். அது மனுதாரரின் முடிவை பொறுத்தது. போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்..