நீலகிரியின் காப்புக்காடுகளுக்கு கவசம் அணிவிப்பு
எ ந்த இடத்தில் வேண்டுமானாலும் சினிமா ஷூட்டிங் நடத்தலாம் என்ற தாராள நிலை இருந்தது ஒரு காலத்தில். அதனால் காப்புக்காடுகள், அழகான புல்வெளிகள் காணாமல் போனது குறித்து அதிகாரத்தில் இருந்த எவருக்கும் அக்கறை இல்லாத நேரம் அது. பெரும்பாலான இந்தி படங்கள் இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரியின் மடியில் படமாக்கப்பட்டன. 1999ல் ஊட்டி அருகே ஸ்கூல்மந்து என்ற இடத்தில் பல ஆயிரம் சதுர அடியில் ஒரு ஊரையே செட் போட்டு உருவாக்கி ராஜு சாச்சா என்ற படத்துக்கு மாதக்கணக்கில் ஷூட்டிங் நடத்தினார்கள். எல்லா விதிகளும் காற்றில் பறந்தன. புல்வெளிகள் காணாமல் போயின. அந்த அநியாயத்தை தொடர் செய்தியாக, படங்களாக பதிவு செய்தது தினமலர். ஐகோர்ட் அதை பார்த்து, தானாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்தது. பொதுமக்கள் மத்தியில் நமது செய்தி உருவாக்கிய கொந்தளிப்பால், அன்றைய முதல்வர் கருணாநிதி அந்த படப்பிடிப்புக்கு மொத்தமாக தடை விதித்தார். வனத்துறை அமைச்சரின் பதவியை பறித்தார். ஐகோர்ட் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. படப்பிடிப்பு நடத்த கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, காப்புக்காடுகள் காப்பாற்றப்பட்டன. அழிக்கப்பட்ட எழில் புத்துயிர் பெற்றது. பசுமை திரும்பியது.