ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் சொத்துக்களை முடக்க முடிவு
சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உள்ளிட்டோரின் சொத்துக்களை முடக்க போலீசார் முடிவு செய்து, அவற்றை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.சென்னை பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5ல் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, வேலுார் சிறையில் உள்ள ஆயுள் கைதி ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில், ரவுடி திருவேங்கடம், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்பவம் செந்தில், அவரின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை, போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என, 30 பேர் மீது, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட, 30 பேரின் சொத்துக்களை முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவற்றை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க, அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பி.என்.எஸ்.எஸ்., என்ற, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா சட்டத்தின், 107வது பிரிவு, கொலையாளிகளின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.