உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‘அரோகரா’ ஆரவாரம்!

‘அரோகரா’ ஆரவாரம்!

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், நுாறாண்டுகளுக்கு பின், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதல்படி, இன்று (நவ.,28) மாலை, 5:00 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை பார்த்து, உணர்ச்சி பெருக்கால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆனந்த கண்ணீருடன் எழுப்பிய அரோகரா கோஷத்தால், மதுரை மாநகரமே அதிர்ந்தது. பாடல்கள் பாடியும் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, கடந்தாண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலை மேல் சென்று, தீபத்துாணை நேரில் ஆய்வு செய்த பின், கார்த்திகை மகா தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அப்போதைய தி.மு.க., அரசு அதற்கு தடை ஏற்படுத்தியது. மேல் முறையீட்டு விசாரணையில், கார்த்திகை திருநாளான இந்தாண்டு நவம்பர், 24ல் ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற நவம்பர், 20ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் அதிரடி

ஆனால், அரசியல் காரணங்களுக்காக, த.வெ.க., அரசு தீபம் ஏற்றாமல், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை ஏமாற்றியது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தீபத்துாணில் தீபம் ஏற்றாதது, ஹிந்துக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம், இது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, ‘ஆகமவிதிப்படி தீபம் ஏற்றாதது அறங்காவலர்கள் முடிவு’ என, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தாக்கல் செய்த, 16 பக்க அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அறங்காவலர்கள் குழுவையும் கலைத்தது. நவ., 28ம் தேதியான இன்று, தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டதுடன், அதை செயல்படுத்தவும், கோவில் நிர்வாகத்தை தற்காலிகமாக நிர்வகிக்கவும், ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை நியமித்தது. தமிழக போலீசுக்கு பதில், சி.ஆர்.பி.எப்., என்ற, மத்திய துணை ராணுவப்படையினர், மலையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று (நவ.,27) இரவு, கோவையில் இருந்து சி.ஆர்.பி.எப்., வீரர்கள் திருப்பரங்குன்றம் வந்தனர். அவர்களை உள்ளூர் மக்கள் மலர் துாவி வரவேற்றனர். நேற்று காலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் இரு நீதிபதிகளும் மதுரை வந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு, கோவில் ஸ்தானிக பட்டர்கள், கலெக்டர், சி.ஆர்.பி.எப்., தென்மண்டல ஐ.ஜி., திருமலா விக்ரம் உள்ளிட்டோர் விரைந்தனர். அங்கு அவர்கள் நீதிபதிகளுடன் ஆலோசித்தனர். தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நீதிபதிகள் தரிசனம் செய்தனர். அதேநேரம், தீபத்துாணில் தீபம் ஏற்றும் வகையில், துாணைச் சுற்றி தற்காலிக மேடை அமைக்கப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக, 13 பேர் கொண்ட வழிகாட்டும் குழு நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்டது. அதில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், சி.ஆர்.பி.எப்., -– ஐ.ஜி.,க்கள், மதுரை மாவட்ட கண்காணிப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீரராகவராவ், திருமங்கலம் ஆர்.டி.ஓ., மதுரை டி.ஆர்.ஓ., பட்டர்கள் சுவாமிநாதன், ரமேஷ், அஜித் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

சிறப்பு பூஜை

இதற்கிடையே, கோவிலில் பட்டர்களுடன் ஆலோசித்து விட்டு திரும்பிய நீதிபதிகள் மாலை, 5:00 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என்று அறிவித்தனர். தீபம் ஏற்றப்படும் மண்கலையங்களுக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதை நீதிபதிகள் ஊர்வலமாக ரத வீதிகளில் எடுத்து வந்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மலைப்பாதை துவங்கும் பழநியாண்டவர் சன்னிதியில் இருந்து தீபத்துாண் 1.1 கி.மீ., துாரத்தில் உள்ளது. மதியம், 3:00 மணியளவில் நீதிபதிகள் மலையேற துவங்கினர். அவர்களுடன் கலெக்டர் உள்ளிட்டோரும் சென்றனர்.

திருவண்ணாமலை குழு

தீபம் ஏற்றுவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஆறு பேர் திருவண்ணாமலையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள், நவ., 24ல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வந்து, ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றவர்கள். தீபம் ஏற்றுவதற்காக, 10 லிட்டர் கொள்ளளவு உடைய மூன்று மண் அகல் விளக்குகள், 10 லிட்டர் நெய், 2 கிலோ சூடம், காடா துணி திரி பயன்படுத்தப்பட்டது. தீபத்துாணில் மேல் பகுதியில் களிமண் வைக்கப்பட்டு, அதன் மேல் மூன்று அகல் விளக்குகள் வைத்து, மேல் பகுதியில் உள்ள அகல் விளக்கில் நெய், திரி, கற்பூரம் வைத்து சரியாக மாலை, 5:00 மணிக்கு பட்டர்கள் ஸ்ரீதர், அஜீத் ஆகியோர் தீபாராதனை காட்ட, நீதிபதிகள் இருவரும் தொட்டு வணங்கி தீபத்தை ஏற்றினர்.

அரோகரா கோஷம்

அப்போது, மலை முழுதும், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என, பக்தர்களின் கோஷம் விண்ணை தொட்டது. பக்தர்கள் 16 கால் மண்டபம் அருகே நின்று தரிசனம் செய்தனர். தவிர, எல்.டி.இ., மெகா திரைகள் மூலம் ஒளிபரப்பப்பட்டது. பட்டாசுகள் வெடித்து மக்கள் கொண்டாடினர். திருப்பரங்குன்றம், மதுரையில் வீடுகளின் வாசல்களில் மக்கள் அகல்விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். ஹிந்துக்களின் நுாற்றாண்டு கனவான தீபத்துாணில் தீபம் ஏற்றும் நிகழ்வை, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் எவ்வித பிரச்னையுமின்றி, சுமூகமாக, வெற்றிகரமாக நடத்தி காட்டினர்.

மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு

‘மதுரையில் சட்ட சீர்குலைவு ஏற்பட்டுள்ளது’ என உச்ச நீதிமன்றம், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவை கண்டித்தது. டிச., 15ல் அவரையும், தலைமை செயலர் சாய்குமாரையும் ஆஜராக உத்தரவிட்டது. இதனால், தீபம் ஏற்ற முழு ஒத்துழைப்பையும் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இன்று காலை முதலே ஓய்வு பெற்ற நீதிபதிகளுடன் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ‘தீபம் ஏற்ற எனக்கு அதிகாரமில்லை’ என, நீதிமன்றத்தில் கலெக்டர் கூறிய நிலையில், தீபம் ஏற்றும் மண் கலயத்தை அவர் பயபக்தியுடன் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்றார்.

டிச., 15 வரை சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு?

தமிழக போலீஸ் துறை வரலாற்றில் முதன்முறையாக உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும், மத்திய துணை ராணுவப்படையின் கட்டுப்பாட்டில் இன்று கொண்டு வரப்பட்டது. தங்களை மலை மீது அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கூறியபோது, ‘பாதுகாப்பு காரணங்களுக்காக அனைவரையும் அனுமதிக்க முடியாது. நாளை நவ., 29 முதல் அனுமதிப்பதில் பிரச்னை இல்லை’ என, சி.ஆர்.பி.எப்., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச., 15ல் நடக்கிறது. அன்று சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம். அதுவரை சி.ஆர்.பி.எப்., வீரர்கள் திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

போலீசாருடன் வாக்குவாதம்

நேற்று காலை முதலே முருக பக்தர்கள் பலர், ஆடல், பாடலுடன் ஊர்வலமாக திருப்பரங்குன்றம் வந்தனர். பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இதற்கிடையே, மலையில் பக்தர்கள் தீபம் ஏற்றலாம் என்ற நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, ஹிந்து அமைப்பினர் கூட்டமாக மலை மீது ஏற முயன்றனர்.அவர்களை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர்கள் இனிகோ திவ்யன், கார்த்திக் தலைமையிலான போலீசார் தடுத்த போது, ‘எங்களை தடுக்க உங்களுக்கு அதிகாரமில்லை’ என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், சி.ஆர்.பி.எப்., ஐ.ஜி., திருமலா விக்ரம் பேச்சு நடத்தினார். ஹிந்து அமைப்பினரின் கோரிக்கை குறித்து, நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, 50 பேர் மட்டும் மலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ