மதுரை: அமைச்சர் பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் சைவ, வைணவத்தை இழிவுப்படுத்தியும், பெண்மையை அவதுாறாகவும் பேசி சர்ச்சையில் சிக்கினார். அனைத்து தரப்பில் இருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பொன்முடி கட்சியில் வகித்த துணைப்பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து ஹிந்துக்களையும், பெண்களையும் அவமதித்து வரும் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கவேண்டும் என ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். போராட்டம்
வி.எச்.பி., மாநில துணை பொதுச் செயலர் சந்திரசேகரன்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, அமைச்சர் பொன்முடி, பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்து ஹிந்து மதத்திற்கு விரோதமாகவும் பெண்களுக்கு எதிராகவும் அவதுாறு ஏற்படுத்தும் வகையிலும் பேசி வருகின்றனர். இதை பார்க்கும் போது தி.மு.க., கட்சி, தலைவரான ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே காட்டுகிறது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் வரை போராடவும் வி.எச்.பி., தயங்காது. வழக்குப்பதிவு
ஹிந்து ஆலய பாதுகாப்பு மாநில பொருளாளர் ஆதிசேஷன்: பொன்முடியின் பேச்சு அராஜகத்தின் உச்சம். தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுதுமுள்ள சைவ, வைணவ சமயங்களை பின்பற்றக்கூடிய பல கோடி மக்களை அவமானப்படுத்தியுள்ளார். கட்சி பதவியை மட்டும் பறித்தது திசை திருப்பும் முயற்சி. அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும். மதஉணர்வுகளை புண்படுத்திய அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பார்லிமென்ட்டில் தி.மு.க.,வினர் குறித்து அமைச்சர் தர்மேந்திரபிரதான் குறிப்பிடுகையில் 'நாகரிகமற்றவர்கள்' என்றார். இதற்கு அக்கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் நாகரிகமற்றவர்கள்தான் என்பதை பொன்முடி போன்றோர் நிரூபித்து வருகிறார்கள். கருப்புக்கொடி
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன்: பொன்முடியின் இந்த அநாகரிகமான பேச்சு ஒட்டு மொத்த ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் மன வேதனையையும் உண்டாக்கி உள்ளது. வேறு எந்த மதத்தையாவது பொன்முடி இப்படி பேசமுடியுமா. பேசினால் அவர்கள் சும்மா விட்டு விடுவார்களா. இதுதான் திராவிட மாடல் பேச்சா. திராவிடர் கழக கூட்டத்தில் அவர் தமிழை பற்றியும் தமிழர்களை பற்றியும் ஈ.வெ.ரா., சொன்னதை பேசியிருக்கலாம். சைவ, வைணவத்தை அவமதித்து விலைமாதுவுடன் ஒப்பிட்டு பேசிய பொன்முடியை கண்டிக்கும் வகையில் பொன்முடிக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், சட்ட போராட்டம் நடத்தப்படும். ஏற்க மாட்டார்கள்
பா.ஜ., மாநில மகளிரணி செயலர் தீபா: தமிழகத்தில் ஹிந்துக்களை மட்டும் கேலி செய்வதை தி.மு.க.,வினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அமைச்சர் பொன்முடியின் இந்த ஒப்பீடு கொச்சைத்தனமானது. இது அவரது உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது. பெண்மையை போற்றுவோம், பாராட்டுவோம், பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்குவது என பெண்கள் ஓட்டுகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திண்டாடி வரும் நிலையில் இப்படி கீழ்த்தரத்துடன் இழிவான செய்கையுடன் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொன்முடியின் குடும்பத்தில் உள்ள பெண்களே அவரது பேச்சை ஏற்க மாட்டார்கள். நீக்க வேண்டும்
ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிகுமார்: எவ்வளவு ஆபாச அழுக்கு, வக்கிர குப்பை பொன்முடி மனதில் இருக்கிறது என்பது தெரிகிறது. பெண்களை ஆபாசமாக பேசியதற்காக, தி.மு.க., தலைமை அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியதை வரவேற்கிறோம். ஹிந்து மதத்தை மட்டும் எதிர்க்க வேண்டும், ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று செயல்படும் இதுபோன்ற நபர்களை வரும்காலங்களில் மக்கள் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்.வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடாத வகையில் அவருக்கான வாய்ப்பை தி.மு.க., மறுக்க வேண்டும். தவறு செய்பவருக்கு வக்காலத்து வாங்கி பேசும் அமைச்சர் ரகுபதியிடமும் கட்சி, அரசு பதவிகளை பறிக்க வேண்டும். பொன்முடி, துரைமுருகன் பேச்சையும் கண்டிப்பதற்கு குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் வக்காலத்து வாங்கி பேசுவது திராவிடத்தனம். உறுதிமொழியை மீறல்
தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைப் பொது செயலர் விஜயகுமார்:தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஞாயிறன்று தி.க., பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஹிந்து மதத்தின் அடிநாதமாக விளங்கும் சைவத்தையும், வைணவத்தையும் மிகவும் கொச்சையாகவும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வகையிலும் விமர்சித்திருக்கிறார்.சைவ சமயத்தின், 63 நாயன்மார்களும், பன்னிரு திருமுறையும், வைணவத்தின், 12 ஆழ்வார்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், தமிழ்மொழியின் ஏற்றமும் அடையாளமுமாகும்.உலகமே போற்றும் சைவ வைணவ சமயத்தை, தரம் தாழ்ந்து விமர்சித்த வனத்துறை அமைச்சரை, பதவியிலிருந்து தமிழக முதல்வர் நீக்க வேண்டும்.அமைச்சராக பதவியேற்கும் போது, ஜாதி, மத, இன பாகுபாடுகளை கடந்து செயல்படுவேன் என்று உறுதி கூறினார். அதை மீறி, ஹிந்து மதத்தை தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.