உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை கூட்டம் 2 நாள் நடக்கும் சபாநாயகர் அப்பாவு தகவல்

சட்டசபை கூட்டம் 2 நாள் நடக்கும் சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை, ''தமிழக சட்டசபை கூட்டம், வரும் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.தமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், நேற்று காலை 11:00 மணிக்கு, சபாநாயகர் அப்பாவு தலைமையில், அவரது அறையில் நடந்தது. கூட்டம் முடிந்த பின், அப்பாவு அளித்த பேட்டி:கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டம் நடக்கும். முதல் நாள், 2024 - 25ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். அன்று அரசினர் தனி தீர்மானம், முதல்வரால் கொண்டு வரப்படும்.மதுரை மாவட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை, மாநில அரசின் அனுமதியின்றி வழங்கியதை ரத்து செய்யக்கோரி, தீர்மானம் கொண்டு வரப்படும். இரண்டாம் நாள் விவாதம் நடந்து, பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இரண்டு நாட்களும் கேள்வி நேரம் உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.

'10 நாள் நடத்த கோரினோம்!'

''சட்டசபை கூட்டத்தை, 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்; சபாநாயகர் ஏற்கவில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், நானும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமாரும் பங்கேற்றோம். எதிர்க்கட்சியினருக்கு பேச அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்; அதிக நாட்கள் சபையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், இரண்டு நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்தனர்.'ஆண்டுக்கு, 100 நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்துவோம்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர். இதுவரை மொத்தமாக, 100 நாட்கள் நடத்தி இருப்பரா என்பது கேள்விக்குறி. கடந்த பட்ஜெட் கூட்டத்தை ஒன்பது நாட்களிலேயே முடித்து விட்டனர். தற்போது மழை, வெள்ளம் பிரச்னை உள்ளது; மாவட்டங்களில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை சட்டசபையில் பேச வாய்ப்பு வேண்டும் என, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் கேட்டுள்ளனர்.எனவே, கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த வேண்டும் என்றோம்; சபாநாயகர் ஏற்கவில்லை. இரண்டு நாட்கள் மட்டும் சட்டசபை என்பது மிகப்பெரிய வருத்தம். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி யும், பல எம்.எல்.ஏ.,க்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. தி.மு.க., அரசு முழுமையாக சட்டசபையை நடத்துவதில்லை; சட்டசபையில் பேசவும் வாய்ப்பு தருவதில்லை. கடந்த 10 ஆண்டுகள் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சொத்து வரி, நில வரி எதுவும் ஏற்றப்படவில்லை. தி.மு.க., ஆட்சியில் தான் ஏற்றி உள்ளனர்.இவ்வாறு வேலுமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை