உதவி செயற்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளராக பதவி உயர்வு
பெரம்பலுார்:தமிழக அரசு 2021ல் பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத்துறை என இரண்டு துறையாக பிரித்தது. பொறியாளர்களிடம் விருப்பக் கடிதம் பெறப்பட்டு, அவர்கள் விரும்பிய துறையில் பணி அமர்த்தப்பட்டனர்.கடந்த 1999ம் ஆண்டு சேர்ந்தவர்களில், 52 பேர் பொதுப்பணித்துறையிலும், 158 பேர் நீர்வளத் துறையிலும் பணியாற்றுகின்றனர். பொதுப்பணித்துறையில் சேர்ந்த 52 பேரும், செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். நீர்வளத்துறையில் பணியில் சேர்ந்த 158 பேரில், 76 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதம், 82 பேர் பதவி உயர்வு கிடைக்காமல் இருந்தனர்.அவர்களில் சிலர், பொதுப்பணித்துறையில் பணியாற்ற, மறுவாய்ப்பு வழங்கக் கோரி, உயர்நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கு ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ளது. நீர்வளத் துறையில், 49 செயற்பொறியாளர்கள் காலியிடங்களில், 2007ல் உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள், தற்போது செயற்பொறியாளராக பதவி உயர்வு பெறும் நிலையில் உள்ளனர்.இதனால், 1999ல் பணியில் சேர்ந்து, தகுதி இருந்தும் பதவி உயர்வு கிடைக்காமல், நீர்வளத்துறையில் பணியாற்றும், 82 உதவி செயற்பொறியாளர்கள் கடும் மன உளைச்சலில் இருந்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், மார்ச், 24ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர்கள் மன்மதன், மணிவண்ணன் ஆகியோர் உத்தரவுபடி, உதவி செயற்பொறியாளர்கள் 74 பேருக்கு, செயற்பொறியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.