உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெண்டர் விடாமல் அதிக விலைக்கு ஆர்.ஓ., கருவிகள் வாங்கியதில் முறைகேடு விசாரணை நடத்த தணிக்கை துறை பரிந்துரை

டெண்டர் விடாமல் அதிக விலைக்கு ஆர்.ஓ., கருவிகள் வாங்கியதில் முறைகேடு விசாரணை நடத்த தணிக்கை துறை பரிந்துரை

சென்னை:வேலுார், ஈரோட்டில் வெளிப்படையாக, 'டெண்டர்' கோராமல், அதிக விலைக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதில் நடந்த முறைகேடுகளை, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில், பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆவணங்கள் ஆய்வு

இதற்காக, கிராம ஊராட்சிகளில், 'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' முறையில் தண்ணீரை சுத்திகரித்து வழங்கும், ஆர்.ஓ., இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று, 2016ல் தமிழக அரசு அறிவித்தது. இதற்கான ஆர்.ஓ., கருவிகள் வாங்கியதில், சில மாவட்டங்களில், 2018 - 2020 இடையே பெரும் முறைகேடு நடந்துள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் விபரம்:வேலுார், ஈரோடு மாவட்டங்களில், ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 35 இடங்களில் ஆர்.ஓ., கருவிகள் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தக் கருவிகள் வாங்குவதற்கு வழிகாட்டும் விதமாக, பொதுப்பணி துறை, 2018ல் விலை புள்ளிகளை வெளியிட்டது. இந்த விலைகளுக்கு உட்பட்டு தான், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்பட்டு இருக்க வேண்டும். இதில் நிர்வாக ஒப்புதல்கள் அளிக்கும் அதிகாரம், மாவட்ட கலெக்டர்களிடம் இருந்தது. இந்நிலையில், பொதுப்பணி துறை வழிகாட்டுதல்களை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கடைப்பிடிக்கவில்லை. அதே நேரம், ஊராட்சி ஒன்றியங்களில் இதுபோன்ற கொள்முதல் பணியின் போது, நிர்வாக பொறியாளரிடம் தொழில்நுட்ப அனுமதி பெற வேண்டும்; அதுவும் பெறப்படவில்லை.

விதிமுறைகள் மீறல்

அத்துடன், இக்கருவிகள் கொள்முதல் தொடர்பாக, நாளிதழ்களில், 'டெண்டர்' அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பொதுப்பணி துறையின் விலை புள்ளிகளை விட, 40 முதல், 262 சதவீதம் கூடுதல் விலையில், ஆர்.ஓ., கருவிகள் வாங்கப்பட்டுஉள்ளன. தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஆர்.ஓ., கருவிகளை அதிகாரிகள் வாங்கியுள்ளனர். அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்ட நிலையில், மாவட்ட கலெக்டர்கள், அவசரகதியில் கொள்முதலுக்கான நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் விதிமுறைகள் மீறலால், 74.94 லட்சம் ரூபாய் வரை கூடுதல் செலவு நடந்துள்ளது. இது குறித்து, தமிழக அரசு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ