ராம்தேவ் சீடர் பாலகிருஷ்ணா சி.பி.ஐ., விசாரணைக்கு "ஆஜர்
டேராடூன் : யோகாகுரு ராம்தேவின் சீடர் பாலகிருஷ்ணா, சி.பி.ஐ., விசாரணைக்காக நேற்று ஆஜரானார். யோகாசன குரு, ராம்தேவின் சீடர் பாலகிருஷ்ணா, போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற்றதாக, சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கில் அவரை இம்மாதம், 29ம்தேதி வரை கைது செய்யக்கூடாது என, ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், சி.பி.ஐ.,விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். கடந்த 3ம்தேதி சி.பி.ஐ., அவரிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தியது. மறுநாள் விசாரணைக்கு பாலகிருஷ்ணா ஆஜராகவில்லை. பாஸ்போர்ட் தொடர்பான வேலை இருந்ததால் ஆஜராக முடியாது, என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர், சி.பி.ஐ.விசாரணைக்காக ஆஜரானார். நேற்று காலை சி.பி.ஐ., அலுவலகத்துக்கு தனது வழக்கறிஞர் மற்றும் பதஞ்சலி யோகபீட அதிகாரிகளுடன் பாலகிருஷ்ணா வந்திருந்தார். பாலகிருஷ்ணாவிடம் அடுத்த கட்ட விசாரணை வரும், 29ம் தேதி நடக்க உள்ளது.