உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2,500 மெகாவாட் மின்சாரம் சேமிக்க திட்டம் ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ கொள்கைக்கு ஒப்புதல்

2,500 மெகாவாட் மின்சாரம் சேமிக்க திட்டம் ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ கொள்கைக்கு ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும், அந்த மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து மீண்டும் பயன்படுத்தவும் பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளுடன் கூடிய, தமிழக பேட்டரி ஸ்டோரேஜ் கொள்கைக்கு, தமிழக அரசு இன்று (அக்.,29) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை அதிக திறன் உடைய பேட்டரியில் சேமித்து, தேவை அதிகம் உள்ள நேரங்களில் மீண்டும் பயன்படுத்தும் திட்டங்களை ஊக்குவிக்க, பல்வேறு சலுகைகளுடன் கூடிய, பேட்டரி ஸ்டோரேஜ் கொள்கையை, தமிழக மின் வாரியம் உருவாக்கியுள்ளது. இதற்கு, இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்: * இந்த கொள்கையின் வாயிலாக தினமும், 2,500 மெகாவாட் மின்சாரத்தை சேமித்து, தேவைப்படும்போது நான்கு மணி நேரம் பயன்படுத்தும் வகையில், பேட்டரி ஸ்டோரேஜ் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது * புதிய சூரியசக்தி மின் நிலையம் மற்றும் ஒரே இடத்தில் அமைக்கப்படும் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களின் உற்பத்தித் திறனில் குறைந்தது, 10 சதவீதம் பேட்டரி சேமிப்பு அமைப்பு நிறுவப்பட வேண்டும். இது, நான்கு மணி நேரம் மின்சாரத்தை சேமித்து, மீண்டும் வழங்கும் திறன் உடையதாக இருக்க வேண்டும் * ஒரு மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் உடைய தற்போதுள்ள சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களிலும் பேட்டரி கட்டமைப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தனியார் நிலம், குத்தகை நிலம், மின் வாரியத்திற்கு சொந்தமான இடங்களில், பேட்டரி கட்டமைப்பு வசதிகளை அமைக்கலாம் * தகுதி பெறும் பேட்டரி சேமிப்பு திட்டங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு, திட்டம் நிறுவப்பட்ட நாளில் இருந்து, 10 ஆண்டுகள் வரை, ‘டிரான்ஸ்மிஷன் சார்ஜ், வீலிங் சார்ஜ்’ கட்டணங்களில், 100 சதவீத விலக்கு அளிக்கப்படும் * பேட்டரி கட்டமைப்புகளை பயன்படுத்தி, மின் தேவை குறைவாக இருக்கும் நேரங்களில் கிடைக்கும் உபரி மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் பயன்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M.SRINIVASAN
நவ 20, 2026 06:35

நல்ல திட்டம் இது மிக அவசியமானது. எதிர்காலத்தில் இது மிக மிக அவசியம். தற்பொழுதும் மின் கட்டமைப்பு சுமைகளை பாதுகாப்பதற்கும் சீராக்குவதற்கும் இது அவசியமான நடவடிக்கை. இதை இன்னும் படிப்படியாக உயர்த்த வேண்டிய தேவையும் இருக்கிறது