புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத்தொடரில் புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்க, மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., விகிதத்தை, 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு, கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது.தற்போது, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச.,01) தொடங்கி, வரும் டிசம்பர் 19ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில், அணுசக்தி மசோதா உட்பட, 14 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்க மசோதா.இந்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி, சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: புகையிலை மற்றும் பான் மசாலா மூலம் கிடைக்கும் வருமானத்தை சுகாதாரம், தேசிய பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் பயன்படுத்தும். நுகர்வோருக்கு விலைகள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்வதே யோசனை. இது வருவாயை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை கிடையாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.