ஓ.பி.எஸ்.சை பா.ஜ., கைவிடாது: தினகரன்
சென்னை: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு, தீயசக்தியான தி.மு.க.,வை வீழ்த்த, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதுதான் இப்போது நடந்து வருகிறது.ஒரு சிலருக்கு பரந்த மனம் இல்லாததால், ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு இல்லை. அதனால்தான் ஓரணியில் திரள வேண்டும் என, திரும்பத் திரும்ப சொல்லி வருகிறேன். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி தொடரக்கூடாது என விரும்பும் கட்சிகள் அனைத்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.தி.மு.க.,வுக்கு எதிரான கட்சிகள், சுயநலத்தை விட்டுவிட்டு, ஒன்றாக இணைந்து செயல்பட்டால், தி.மு.க.,வை கண்டிப்பாக தோற்கடிக்க முடியும். 2021 சட்டசபை தேர்தலில் அமித் ஷா கூறியபடி கூட்டணி அமைத்திருந்தால், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்காது.அதுபோன்ற தவறு இப்போது நடக்கக்கூடாது என்பதில், அவர் உறுதியாக இருக்கிறார். 'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம்' என, அமித் ஷா கூறினாலும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை பா.ஜ., கைவிடாது.இவ்வாறு அவர் கூறினார்.