உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயத்தில் இளம் தலைமுறை இறங்க வேண்டும் பா.ஜ. அண்ணாமலை அறிவுறுத்தல்

விவசாயத்தில் இளம் தலைமுறை இறங்க வேண்டும் பா.ஜ. அண்ணாமலை அறிவுறுத்தல்

கோவை: ''இளம் தலைமுறையினர் விவசாயத்தில் இருக்கும் சவால்களையும், வாய்ப்புகளாக மாற்றிவெற்றிபெற வேண்டும்,'' என, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் அருகே மத்வராயபுரம் கிராமத்தில், 11 ஏக்கர் விவசாய நிலத்தை தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வாங்கியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு,'விவசாய நிலத்தை வாங்கியது உண்மைதான். இந்த நிலத்தை எனது சேமிப்பு, என் மனைவி சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றை பயன்படுத்தி வாங்கியுள்ளேன். மத்திய அரசு திட்டத்தின் கீழ், பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன்' என, அவர் விளக்கம் அளித்தார். இந்நிலையில், தனது விவசாய நிலத்தில், அவர் தீவனம் அறுவடை செய்து கால்நடைகளுக்கு உணவாக அளித்து பராமரிக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அண்ணாமலை கூறியதாவது: அரசியலுக்கு மத்தியில் விவசாயம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது குடும்பம் ஆண்டாண்டு காலமாக விவசாயம் மட்டுமே முழுநேர பணியாக செய்துவருகிறது. அரசியல் சமயத்திலும் விவசாயத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இடைப்பட்ட நேரத்தில் இயற்கை விவசாயம், மண் சார்ந்த விவசாயம் குறித்த புத்தகங்களை ஆர்வமுடன் படிக்கிறேன். இன்றைக்கு நாட்டின் வேறு வேறு பகுதியில் இருக்கும் நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்கிறோம். நம்முடைய காங்கேயம் மாடு உட்பட நிறைய மாடுகள் வளர்க்க ஆசை. மத்திய, மாநில அரசுகள் தரும் சலுகைகளை பயன்படுத்தி விவசாயத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஈடுபட்டுள்ளேன். கோவையில் ஒருவித விவசாயம், கரூரில் ஆடு வளர்ப்பு என ஒருவித விவசாயம் செய்கிறேன். அதிகப்படியான நேரத்தை விவசாயத்துக்கு ஒதுக்கிறேன். வளரும் தலைமுறைக்கு நான் சொல்லவேண்டிய தகவல் என்பது இந்தியாவை பொறுத்தவரை விவசாயம் ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. காரணம், குடும்பங்களில் எல்லாம் 'நியூக்கிளியர்' ஆக மாறிக்கொண்டிருக்கின்றன. குடும்பத்தில் இருந்து நிறைய குழந்தைகள் பிரிந்து செல்கின்றனர்; சொத்து பிரிகிறது. பெரிதாக விவசாயம் செய்ய முடியாது . அமெரிக்காவில், பெரும் விவசாயிகள் இருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை சிறுகுறு விவசாயிகளாக மாறிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல விவசாயத்தை மாற்றிக்கொண்டு வர வேண்டும்; இது முதல் சவால். அதேநேரம் எத்தனையோ பேருக்கு விவசாயம் செய்ய ஆசை இருக்கிறது; ஆனால் நிலம் இல்லை. நிலம் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. விவசாயம் செய்ய விரும்பும் இளம் தலைமுறையினர் இவற்றை சவாலாக இல்லாமல், வாய்ப்பாக பார்க்க வேண்டும். நகரில் இருந்தாலும்கூட வெளியே நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நிலம் வாங்கி கூட்டு முயற்சி செய்யலாம். விவசாயத்தை பொறுத்தவரை கண்ணும் கருத்துமாக களத்தில் இருந்தால் மட்டுமே வெற்றி. மேற்பார்வை விவசாயம் செய்பவர்களுக்கு எப்பொழுதுமே வெற்றி கிடைக்காது. இளம் தலைமுறையினர், விவசாயத்தில் லாபம் பார்க்க நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு அடிப்படை அறிவையும் வளத்துக்கொள்ள வேண்டும். கால்நடை வளர்ப்பு, இயற்கை விவசாயம், ரசாயன உரம் இல்லாத விவசாயம் என கலந்து செய்யும்போதுதான் லாபம் கிடைக்கும். இயற்கை உரத்துக்கு கால்நடைகள் வேண்டும். அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக நாம் மாறியிருக்கிறோம். அதேசமயம், புரதச்சத்து அதிகம் உட்கொள்ளும் நாடாகவும் மாறியுள்ளோம். நியாமான, தரமான பாலை தரும்பொழுது சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. பாலை மிக வேகமாக வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பதுசவாலானது. இதற்கு தீர்வுகாண மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. அதிலும் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். 'நேஷனல் கோகுல் மிஷன்' (தேசிய கோகுல் இயக்கம்) என்ற திட்டத்தில் மத்திய அரசு மானியத்துடன் சலுகைகளை வழங்குகிறது. அனைத்து திட்டங்களை அறிந்துகொள்ளுங்கள். களத்தில் ஒவ்வொரு பிரச்னையையும் சரிசெய்துதான் முன்னேற முடியும். பாரம்பரிய விஷயத்தை நோக்கி உலகமே திரும்பிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், ஐ.ஐ.டி., சென்னையுடன், 'வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன்' இணைந்து நடத்திய ஒரு நாள் இயற்கை விவசாய பயிலரங்கில் நிறைய விவசாயிகள் பயனடைந்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை