உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ள பாதிப்புக்கு வாய்ப்புள்ள இடங்களில் தயார் நிலையில் படகு, உணவு, மருந்துகள்

வெள்ள பாதிப்புக்கு வாய்ப்புள்ள இடங்களில் தயார் நிலையில் படகு, உணவு, மருந்துகள்

சென்னை:தமிழகத்தில், கடந்த ஆண்டுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு, உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வடிகால்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், பக்கத்து மாவட்டங்களில், கடந்த ஆண்டுகளில் அதிகமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான வடிகால் பணிகள், சம்பந்தப்பட்ட துறைகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், குறிப்பிட்ட சில இடங்களில் தொடர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்த பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தவுடன், அங்கிருப்பவர்களை மீட்பதற்காக, வேறு இடங்களில் இருந்து படகுகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.இதை தடுக்கும் விதமாக, வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன், அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல, தேவையான எண்ணிக்கையில் படகுகளை முன்கூட்டியே இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதேபோன்று, மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு தேவையான அளவுக்கு மருந்து, உணவு பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பிற மாவட்டங்களில், வெள்ள பாதிப்பு இடங்களை கலெக்டர்கள் கணக்கெடுத்து, இதேபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறோம்.

நடவடிக்கைகள்

வெள்ளத்தில் சிக்கும் கால்நடைகளை மீட்பதற்கான ஏற்பாடுகளையும் மேற் கொள்ள, கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீர்த்தேக்கங்கள், நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகின்றன. மழைக்காலத்தில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, நீர்வளத் துறையுடன் இணைந்து உபரி நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி