சிகிச்சைக்கு வந்த பாகிஸ்தானி உயிரிழப்பு; விமானத்தில் உடல் லாகூர் அனுப்பி வைப்பு
சென்னை, : பாகிஸ்தானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக, சென்னை வந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பாகிஸ்தான் லாகூர் நகருக்கு, விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய, கொலை வெறி தாக்குதலில், அப்பாவி சுற்றுலா பயணியர், 26 பேர் இறந்தனர். இதன் பின்னணியில், பாகிஸ்தான் உள்ளதால், மருத்துவம் மற்றும் பிற காரணங்களுக்காக, இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உளவுத்துறை மற்றும் குடியுரிமை அதிகாரிகள், மாநில அமைப்புகள், நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை தீவிரமாக கண்காணித்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த சையது ஆர்யன் சஷா ,24, மருத்துவ விசாவில் கடந்த டிசம்பரில் சென்னை வந்தார். அவருக்கு அமைந்தகரையில் உள்ள, எம்.ஜி.எம்., மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு உதவ இரண்டு பேர் பாகிஸ்தானில் இருந்து வந்திருந்தனர். இந்திய குடியுரிமை அதிகாரிகள், மருத்துவமனையில் இறந்த சையது சஷா உடலை, நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இலங்கை வழியாக, பாகிஸ்தானின் லாகூருக்கு அனுப்பி வைத்தனர்.நோயாளிக்கு துணையாக வந்திருந்த இருவரையும், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து, அபுதாபி வழியாக லாகூர் நகருக்கு அனுப்பி வைத்தனர்.