பயங்கரவாத தடுப்பு பிரிவு வசம் வெடிகுண்டு மிரட்டல் வழக்குகள்
சென்னை: சென்னையில், மருத்துவமனை, பள்ளிகள், விமான நிலையங்களுக்கு விடுக்கப்பட்ட, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான 23 வழக்குகள், பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன.தமிழக போலீசாரை திணறடிக்கும் வகையில், மர்ம நபர்கள், இ - மெயில் வாயிலாக, அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஒரே நாளில், தனியார் மருத்துவமனை, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, பீதியை ஏற்படுத்தி உள்ளனர். அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி வீட்டிற்கும், தலைமைச் செயலகத்திற்கும் கூட, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களுக்கும், விமான நிலையத்திற்கும், வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இவ்வாறு மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார், அவர்கள் எந்த நாட்டில் பதுங்கி உள்ளனர் என்பதை, போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மத்திய தொலை தொடர்புத் துறையின் உதவியை பெற்றும், மிரட்டல் ஆசாமிகளை கண்டறிய முடியவில்லை.இந்நிலையில், சென்னையில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பதிவான 23க்கும் அதிகமான வழக்குகளை, ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சமீபத்தில், தன்னை காதலிக்காத இளைஞரை பலி வாங்க, தமிழகம், கேரளா, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள, ஸ்டேடியம், மருத்துவக் கல்லுாரி என, 21 இடங்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ரேனே ஜோஷில்டா, 26, குஜராத் மாநிலம், ஆமதாபாத் 'சைபர் கிரைம்' போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருக்கும், ஏற்கனவே விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கும் தொடர்பு உள்ளதா என, மாநில சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், விசாரணை நடந்து வருகிறது.