உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி வீடு, பா.ம.க., ஆபீசுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

பழனிசாமி வீடு, பா.ம.க., ஆபீசுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: மலேஷியாவில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கும், சென்னையில் உள்ள பா.ம.க., அலுவலகம் மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டிற்கும், மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் சோதனை நடத்தப்பட்டது. டி.ஜி.பி., அலுவலகத்திற்கு மர்ம நபர்கள், நேற்று அனுப்பிய இ - மெயிலில், சென்னை தி.நகர் திலக் தெருவில் உள்ள பா.ம.க., அலுவலகம் மற்றும் அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டில் குண்டுகள் வெடித்து சிதற இருப்பதாக மிரட்டல் விடுத்து இருந்தனர். இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார், நேற்று இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் அது புரளி என்று தெரியவந்தது. அதேபோல, மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 129 பயணியர் மற்றும் ஊழியர்கள் எட்டு பேருடன், மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று காலை சென்னை புறப்பட்டு வந்தது. விமானம் காலை, 10:40 மணிக்கு சென்னையில் தரையிறங்க இருந்த நிலையில், 9:30 மணியளவில், விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் அனுப்பிய, இ - மெயிலில், மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுத்து இருந்தனர். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், அந்த விமானம் தரையிறங்கியதும் சோதனை நடத்தினர். பயணியர் மற்றும் விமான ஊழியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனை முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரியவந்தது. இச்சம்பவங்கள் தொடர்பாக, சென்னை மாநகர போலீசின் மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ