ஆதர்ஷ் வீட்டு வசதி திட்ட ஆவணங்கள் மாயம் : விசாரணை குறித்து மும்பை ஐகோர்ட் கவலை
மும்பை : ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டம் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து, சி.பி.ஐ., நடத்தி வரும் விசாரணையில் எவ்வித முன்னேற்றம் இல்லாமல் இருப்பது குறித்து, மும்பை ஐகோர்ட் கவலை தெரிவித்தது. இது தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி, காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கார்கில் போர்வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், இத்திட்டம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை மந்தகதியில் நடந்து வருவதாக மும்பை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், முரே தலைமையிலான பெஞ்ச் தனது உத்தரவில் கூறியதாவது: சி.பி.ஐ.,யின் நடவடிக்கை எங்களுக்கு அதிருப்தியளிப்பதாக உள்ளது. சரியான முறையில் விசாரணை நடத்தி நல்லதொரு தீர்வை தரவேண்டும். அதிகாரிகள் வேறு பணியில் மும்முரமாக இருப்பதாக கூறும் காரணத்தை ஏற்பதற்கு இல்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகையை குறித்த காலத்திற்குள் தாக்கல் செய்யாததால் ஜாமின் பெற்றுள்ளனர் . மேலும், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளை, ஐதராபாத்தில் உள்ள தடயவியல் பரிசோதனை ஆய்வுக்கூடத்திற்கு குறித்த காலத்திற்குள் அனுப்பவில்லை. இவை கைப்பற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அனுப்பாதது ஏன். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
சி.பி.ஐ., தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சால்வி கூறுகையில், 'மந்த்ராலயாவில் உள்ள நகர்ப்புற வளர்ச்சித் துறை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்குகளில், சில பைல்கள் மாயமாகி இருந்தன. இதனால், தடயவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பமுடியவில்லை. மேலும் சில பைல்களில் உள்ள பக்கங்கள், டூப்ளிகேட்டாக இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது கையில் இருக்கும் டிஸ்க்குகள், ஒரு வாரத்திற்குள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படும்' என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,' இந்த வழக்கின் நிலவரம் குறித்து, செப்டம்பர் 5ம் தேதிக்குள் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்' என, கூறினர்.