மின் கம்பி உள்ளிட்ட சாதனங்களுக்கு தட்டுப்பாடு மும்முனை இணைப்பு வழங்க ரூ.20,000 லஞ்சம்
சென்னை:மின் கம்பி உள்ளிட்ட சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விரிவாக்க பகுதிகளில், மும்முனை பிரிவில் விரைவாக மின் இணைப்பு வழங்க, சில பணியாளர்கள் குறைந்தது, 20,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின் வாரியம் மட்டுமே வழங்குகிறது. வீடுகளுக்கு ஒருமுனை, மும்முனை பிரிவுகளின் கீழ் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. புதிய மின் இணைப்புக்கு, வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தாமதம் தற்போது, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், மின் கம்பி உள்ளிட்ட சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், சென்னை விரிவாக்க பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விரிவாக்க பகுதிகளில், விரைவாக மின் இணைப்பு வழங்க, குறைந்தது 20,000 ரூபாய் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: சென்னை புறநகரில், மும்முனை பிரிவில் மின் இணைப்புக்கு விண்ணப்பம் செய்து ஒன்றரை மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்கவில்லை. விண்ணப்பத்தை பார்த்து, அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், மொபைல் போனில் தொடர்பு கொண்டு நேரில் வருமாறு கூறுகின்றனர். அவர்களிடம் சென்றால், 'மும்முனை பிரிவுக்கு, 30,000 ரூபாய் - 40,000 ரூபாய் தந்தால், விரைவாக மின் இணைப்பு வழங்கப்படும்' என்கின்றனர். அவ்வளவு தொகை தர முடியாது என்றால், '20,000 ரூபாய் தர வேண்டும்' என்று கறாராக கூறுகின்றனர். பணம் தர முடியாது என்றால், மின் இணைப்பு வழங்குவதற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் தாமதம் செய்கின்றனர். விசாரணை உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்களிடம் புகார் அளித்தால், 'மின் இணைப்பு வழங்குவதற்கான, மின் கம்பி உள்ளிட்ட சாதனங்கள் இல்லை, யாரிடம் வேண்டுமானாலும் கூறவும்' என, கூறுகின்றனர். எனவே, ஒவ்வொரு அலுவலகத்திலும் மின் இணைப்பு கோரி, எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி, விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.