| ADDED : ஜூலை 17, 2011 12:31 AM
புவனகிரி : புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழாவில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடலில் கத்தியால் கீறி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கடலூர் மாவட்டம் புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 14ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அன்று முதல், தேவாங்க பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் கத்தி போடும் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று, கீழ்புவனகிரி வெள்ளாற்றுக்கு யானையுடன் சென்று புனித நீர் கொண்டு வந்தனர். வரும் வழியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்தி, கையில் நீண்ட கத்தியுடன் பயபக்தியுடன் ஆடினர். மார்பிலும், கைகளிலும் கத்தியால் கீறி, ரத்தம் வரவழைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ரத்தம் வந்ததும் மஞ்சள் பொடியை உடலில் பூசிக் கொண்டனர். கைக்குழந்தைகளுக்கும் வேண்டுதலின் பேரில் கத்தியால் லேசாகக் கீறி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழா, வரும் 23ம் தேதி வரை நடக்கிறது.