உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., அதிகாரி இப்படி பொய் சொல்லலாமா? ஐகோர்ட் நீதிபதி நேரடி எச்சரிக்கை

ஐ.ஏ.எஸ்., அதிகாரி இப்படி பொய் சொல்லலாமா? ஐகோர்ட் நீதிபதி நேரடி எச்சரிக்கை

சென்னை : 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பொய் பேசலாமா' என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ஓராண்டு கடந்தும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான்சி மெர்லின் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு விபரம்: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லுாரியில், 2007ல் உடற்பயிற்சி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அங்கீகரிக்கப்பட்ட என் பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு, கல்லுாரி கல்வி இணை இயக்குநருக்கு கல்லுாரி நிர்வாகம் 2008ல் கடிதம் அனுப்பியது. பின், பல முறை நினைவூட்டல் கடிதமும் அனுப்பியது. இறுதியாக, 2021 டிசம்பர், 5ல் என் பணி நியமனத்துக்கு கல்லுாரி கல்வி இணை இயக்குநர் ஒப்புதல் அளித்தார். எனினும், 2007 முதல் எனக்கு ஊதியம் உள்ளிட்ட பண பலன்களை வழங்கவில்லை. இதைக்கேட்டு, இணை இயக்குநருக்கு மனு அளிக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், 'இந்த பணி நியமனத்துக்கு உயர் கல்வித்துறை செயலரிடம், மேலும் ஓர் ஒப்புதல் பெற வேண்டும்' என்று, 2022ல் உத்தரவு பிறப்பித்தார்.

ரத்து செய்தது

இதை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இணை இயக்குநரின் உத்தரவை ரத்து செய்தது. அத்துடன், 2007 முதல் ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களையும் கணக்கிட்டு, நான்கு வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று, கடந்தாண்டு மார்ச், 25ல் உத்தரவிட்டது. எனினும், இதுவரை எனக்கு ஊதியம் வழங்கவில்லை. எனவே, உத்தரவை அவமதித்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோபால் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, 'இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டு முடிந்துவிட்டது. அவமதிப்பு வழக்கும் நான்கு முறை விசாரணைக்கு வந்து விட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. அதேநேரம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆஜராகி உள்ளார். 'நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் எதற்காக ஆஜராக வேண்டும்? ஒருமுறை ஆஜரானால், மறுமுறை ஆஜராக தேவையில்லை. இந்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தேவையில்லை என்று நினைக்கிறீர்களா?' என, கேள்வி எழுப்பினார்.

தள்ளிவைப்பு

அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், 'தற்போது உயர் கல்வி செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபால் இல்லை. வேறொரு அதிகாரி உள்ளார்' என்றார். அதற்கு, மனுதாரர் தரப்பில், 'வழக்கு தொடரும் போது, இவர் தான் செயலராக இருந்தார்' என்றார்.அதை கேட்ட நீதிபதி, 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி பொய் சொல்லலாமா? வழக்கு தொடரும் போது, அந்த பதவியை வகித்து உள்ளீர்கள். ஓராண்டு கடந்தும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்துள்ளீர்கள். 'எனவே, இந்த அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப் போகிறேன்' என்று எச்சரித்தார்.உடன் அரசு தரப்பில் வழக்கறிஞர், 'மனுதாரரின் ஊதியத்தை கணக்கிட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம். 'அடுத்த விசாரணைக்குள் அரசிடம் இருந்து உரிய பதிலை பெற்று தெரிவிக்கப்படும்' என்றார். அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை வரும், 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சிந்தனை
ஏப் 21, 2025 12:37

பொய் சொல்லும் உரிமையை வக்கீல்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்துள்ளார்கள்.. ஏனென்றால் அவர்கள் நாளை நீதிபதியாக ஆக வேண்டும்.. மற்றவர்கள் யாரும் பொய் சொல்லக்கூடாது உண்மை தான் பேச வேண்டும். அதனால் அவர்கள் நீதிபதியாக ஆக முடியாது. வெள்ளையன் எழுதிய சட்டத்தின் அழகு


Ravi Kulasekaran
ஏப் 21, 2025 09:49

ஐஏஎஸ் அதிகாரிகாரியை கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே மற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக அமையும்


GMM
ஏப் 21, 2025 09:11

பள்ளி நிர்வாகம் தேர்வு முறை இல்லாமல், அங்கீகாரம் செய்ய அதிகாரம் உண்டா? அங்கீகரிக்கப்பட்ட பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்கும் போது, நிதி ஒதுக்கீடும் கேட்க வேண்டாமா? கல்லுாரி கல்வி இணை இயக்குநருக்கு கல்லுாரி நிர்வாகம் 2008 ல் கடிதம். ஆனால், 2021 நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது எப்படி? 2007 முதல் ஊதியம், பண பலன்களை வழங்காத போது எப்படி வாழ முடியும்? வேலை செய்ய அனுமதிக்க முடியும்? இதுவே சட்ட விரோதம். ஏன் வேறு வேலைக்கு செல்லவில்லை? அதிகாரியை விசாரிக்கும் முன், நீதிமன்றம் முதலில் மனுதாரர், கல்லூரி நிர்வாக விளக்கம் பெற வேண்டும். ஆட்சி பணி அதிகாரியை தண்டிக்க கவர்னர் அனுமதி தேவை.


Bhaskaran
ஏப் 21, 2025 08:58

இந்தமாதிரி அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம் செய்யவேண்டும்


sangarapandi
ஏப் 21, 2025 08:54

பல அரசு துறைகளில் நீதி மன்றங்கள் நான்கு வாரங்களுக்குள் நீதி மன்றதீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என வழங்கிய தீர்ப்புக்களை நிறைவேற்றாமல் வருட கணக்கில் காலம் கடத்துகின்றனர். எனவே நீதி மன்ற தீர்ப்பு வழங்கிய காலத்திலிருந்து 60 நாட்களுக்குள்பணம் சம்பந்தபட்ட நீதிமன்றத்தீர்ப்பை நிறைவேற்றாத அரசு துறையின் மீது நீதி மன்றங்களே நேரில் தலையிட்டு ஜப்தி போன்ற நடவடிக்கைளை மேற்கொண்டால் மட்டுமே நீதி மன்ற தீர்ப்புக்கள் நிறைவேற்றப்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 07:41

[அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை வரும், 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.] அரசு தரப்பு இன்வால்வ் ஆகியிருந்தால் இப்படித்தான் ..... இவை அதர்ம மன்றங்கள் .....


अप्पावी
ஏப் 21, 2025 06:56

பொய் சொன்னாத்தான் வக்கீல். நிறைய பொய் சொல்லி வக்கீல் நீதிபதியான பிறகு பொய் சொல்லாம நேர்மையாளராயிடுவாரு.


Varadarajan Nagarajan
ஏப் 21, 2025 06:40

அலட்சிய அரசு அதிகாரிகள்மீதும் அரசுமீதும் பல வழக்குகளில் நீதிமன்றம் இவ்வளவு மென்மையாக நடந்துகொள்கிறது என தெரியவில்லை? தங்களது வேலையே செய்யவே நீதிமன்றத்தை நாடி நீதிபெறவேண்டியுள்ளது. பிறகு அதை அமல்படுத்த மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டியுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் மற்றும் அனைத்து சலுகைகளையும் பெரும் இதுபோன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் நிறையபேர் உள்ளனர். இவர்கள் இருந்தென்ன பயன்?


சமீபத்திய செய்தி