ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து
சென்னை: சட்டவிரோதமாக ஒன்று கூடியதாக, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 15 பேர் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், 100வது விஜயதசமி விழாவைக் கொண்டாடும் வகையில், வி.ஜெயபால் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், கடந்த ஆண்டு அக்., 2ம் தேதி ஊர்வலம் செல்ல முற்பட்டனர். அதை தடுத்து நிறுத்திய ஆம்பூர் போலீசார், அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடி ஊர்வலம் செல்ல முற்பட்டதாக, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, ஆம்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, வி.ஜெயபால் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், 15 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி எம். நிர்மல்குமார் முன் நடந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் சட்டவிரோதமாக கூடி ஊர்வலம் செல்ல முற்பட்டதாக, பொது மக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. வி.ஏ.ஓ., அளித்த புகாரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மனுதாரர்கள் ஒன்று கூடியதன் மூலம், பொது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறுவதற்கோ அல்லது பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறுவதற்கோ, எவ்வித ஆதாரமும் இல்லை. அரசு தரப்பில் எந்தவொரு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. இது, புகாரின் உண்மைத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்பதால், வழக்கை ரத்து செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.