உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றி பயணம் திட்டத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்

வெற்றி பயணம் திட்டத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்

சென்னை: அரசு பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், வெற்றி பயணம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, திரும்ப பெறப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய தி.மு.க., ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட, ‘விடியல் பயண திட்டம்’ விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றி பயண திட்டம்’ என்ற பெயரில், அக்., 2ல் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் வாயிலாக, தமிழகம் முழுதும், தினமும், 12,600க்கும் அதிகமான, சாதாரண, எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் பஸ்களில் பெண்கள் இலவச பயணிக்கலாம். இத்திட்டத்தை எதிர்த்து. ஈரோட்டை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். மனுவில், ‘அரசின் வெற்றி பயண திட்டம் காரணமாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும். பெண் பயணியரிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது, அரசியல் சட்டத்தின் சம உரிமையை மீறும் செயல். சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில் மட்டுமே, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் தொடர்பாக எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, வெற்றி பயணம் திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், ‘சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘ஈரோட்டில் இரண்டு வழித்தடங்களில் மட்டுமே பஸ்களை இயக்கும், தனியார் பஸ் உரிமையாளர், தமிழகம் முழுதும் செயல்படுத்தப்படும் வெற்றி பயணம் திட்டத்தை எதிர்த்து, எப்படி வழக்கு தொடர முடியும்’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், ‘ஒட்டுமொத்த திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்துள்ள, இந்த வழக்கை, பொதுநல வழக்காக கருத முடியாது’ என்றும் கூறினர். இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி