அஜாக்கிரதை நர்ஸ் மீது வழக்கு பதிவு
வேலுார்: வேலுார் அரசு மருத்துவமனையில், அஜாக்கிரதையால் பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை கத்திரியால் துண்டித்த நர்ஸ் மீது வழக்கு பதியப்பட்டது. வேலுார், முள்ளிப்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி விமல்ராஜ் மனைவி நிவேதா, 24, என்பவருக்கு வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மே 24ல் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்ற, குழந்தையின் வலது கையில் ஊசி பொருத்தி, அதன் மேல் டேப் ஒட்டப்பட்டது.ஊசியை அகற்ற டேப்பை கையில் அகற்றாமல், கத்திரியை பயன்படுத்தி நர்ஸ், துண்டித்த போது குழந்தையின் வலது கை கட்டை விரல் துண்டானது. தொடர்ந்து, குழந்தையின் கையில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய, உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது.மருத்துவமனை நிர்வாகம் புகார் படி, கணியம்பாடி தாலுகா போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்ட நர்ஸ் அருணாதேவி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், அருணாதேவி பணி மாற்றமும் செய்யப்பட்டார்.இதற்கிடையே, குழந்தைக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடியாது எனவும், உயிருக்கு ஆபத்து ஏற்படாதவாறு ரத்தக்கசிவை தடுத்துள்ளதால், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும், ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.