உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்கீல்கள் மீதான வழக்குகளை கைவிட இயலாது; ஐகோர்ட்டில் அரசு திட்டவட்டம்

வக்கீல்கள் மீதான வழக்குகளை கைவிட இயலாது; ஐகோர்ட்டில் அரசு திட்டவட்டம்

சென்னை: 'துாய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட இயலாது. வழக்குகளை திரும்ப பெற்றால், அது தவறான முன் உதாரணமாகும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளனர்; அவர்களை உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் விஜய் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் பாரதி உள்பட ஆறு வழக்கறிஞர்களை உடனே விடுவிக்க உத்தரவிட்டது.

மனு காலாவதி

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்த வழக்கை ஏன் கைவிடக்கூடாது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட இயலாது. வழக்கறிஞர்களின் செயலால், அரசு சொத்துகள் மட்டுமின்றி, தனி நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்குகளை திரும்ப பெற்றால், அது தவறான முன் உதாரணமாக மாறிவிடும். கைதான வழக்கறிஞர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளதால் ஆட்கொணர்வு மனு காலாவதியாகி விட்டது,'' என்றார். அதை கேட்ட நீதிபதிகள், 'இது ஒரு போராட்ட வழக்கு தானே. எதற்கு இவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் தானே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில், 'மறப்போம், மன்னிப்போம்' என்ற நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்கலாமே. 'போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை அத்துமீறி நடத்தியதாக, போலீசார் மீதும் குற்றச்சாட்டு உள்ளதே' என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''தவறு செய்திருந்தால், போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். போலீசாரும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே,'' என்றார். இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் கிருஷ்ணகுமார், மோகன் ஆகியோர் ஆஜராகி, 'கைது செய்யப்பட்டது முதல் விடுவிக்கப்படும் வரை, பெண் வழக்கறிஞர்கள் ரத்தம் சிந்தும் அளவிற்கு கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனர்' எனக்கூறி, மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தனர்.

எதிர்ப்பு

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: பெண் வழக்கறிஞர்களை அழைத்து பேசியதில், காவல்துறை அவர்களிடம் அத்துமீறி நடந்து உள்ளது தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஒரு நபர் ஆணையம் ஏன் அமைக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதற்கு, 'ஆட்கொணர்வு மனு மீது, இதுபோல ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது. வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கை மீது, தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல், இந்த முடிவு எடுக்கப்படுகிறது' என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

lana
ஆக 30, 2025 11:25

இதே போல இந்தப் போராட்டம் க்கு ஆதரவு கொடுத்த அனைவரின் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும். அதென்ன வழக்கறிஞர் மட்டும்.


Ragupathi
ஆக 30, 2025 11:04

நாட்டில் போராடவே கூடாதா. அவர்கள் அறவழியில் தானே போராடினார்கள். பொது சொத்து எங்கு சேதமாகியது. இதை கேட்டு கம்மியூனிஸ்டுகள் மௌனமாக இருப்பது நாளை அவர்ககளுக்கே கேடாய் முடியும்.


சாமானியன்
ஆக 30, 2025 06:16

வழக்கறிஞர்கள் மீது ஏன் இந்த காண்டு ? தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் திமுக கட்சியை எதிர்த்து அல்ல. தமிழக அரசாங்கம் தூய்மைப் பணியாளர்கட்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். ஏற்கனவே திமுக ஆட்சியை பெருவாரியான மக்கட்கு பிடிக்கலே. வோட்டிற்கு பணம் கொடுத்தால் பிரச்னை சரியாய் விடுமா என்ன ?


Kasimani Baskaran
ஆக 30, 2025 04:44

தூய்மைப்பணியாளர்களுக்கு அரசு நேரடியாக வேலை கொடுத்தால் கஜானா காலியாகிவிடும் - ஆனால் குத்தகைதாரர்களுக்கு அதை விட கொள்ளை கட்டணத்தில் பராமரிக்க கொடுத்தால் கஜானா நிரம்பி வழியும். இதுதான் திராவிட கோட்பாடு. ஏழைகள் இவர்களின் இலக்கு. தீமக்காவுக்கு ஓட்டுப்போட்டு ஏழைகள் மற்றும் பட்டியலினத்தவர்கள் சுத்த பயித்தியக்காரர்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வக்கீல்கள் கூட கேவலமானவர்கள் என்று நீதிமன்றமும் சொல்வது அடக்குமுறை. போராட உரிமையில்லை என்பது கேவலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை