மாணவி தற்கொலையில் சி.பி.ஐ., விசாரணை; குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வார்டன் மனு: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சி.பி.ஐ.,கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய வார்டன் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.17 வயது சிறுமி மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து, அப்பள்ளியின் விடுதியில் தங்கினார். அவர் 2022 ஜன.9 ல் விடுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். விடுதி அலுவலர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மகளின் உடல்நிலை குறித்து தந்தைக்கு தெரிவித்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். உடல்நிலை சரியில்லாமல் மாணவி தொடர்ந்து வாந்தி எடுத்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் மாணவி 2022 ஜன.19 ல் இறந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்தனர். விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். அவருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது.தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அழைத்ததாக மாணவி கூறியதாக வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி 2022 ஜன.31 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார்.திருச்சி நீதிமன்றத்தில் சி.பி.ஐ.,குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கு எதிராக சகாயமேரி,'மாணவியின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மதம் மாற அவரை யாரும் வற்புறுத்தவில்லை. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்,'என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஜி.இளங்கோவன் செப்.18 க்கு ஒத்தி வைத்தார்.