உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை; கரூரில் களமிறங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள்

த.வெ.க., கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை; கரூரில் களமிறங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள்

கரூர்: கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணையை துவக்கினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. ஆனால், கடந்த 13ல், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை சி.பி.ஐ., அதிகாரிகள் கரூர் வந்தனர். குஜராத் கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான, சி.பி.ஐ., - எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில், ஏ.எஸ்.பி., முகேஷ் குமார், டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் சி.பி.ஐ., குழு வந்தது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தங்கியிருந்த சி.பி.ஐ., - எஸ்.பி., பிரவீன்குமாரிடம், சிறப்பு புலனாய்வு குழு ஏ.டி.எஸ்.பி., திருமால், 1,300 பக்க விசாரணை அறிக்கையை ஒப்படைத்தார். இதையடுத்து, கரூர் துயர சம்பவ வழக்கு தொடர்பான விசாரணை அலுவலகத்தை கரூரில் அமைப்பதா அல்லது மதுரையில் உள்ள சென்னை மண்டல சி.பி.ஐ., இணை அலுவலகத்தில் அமைப்பதா என சி.பி.ஐ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. கரூரில் சி.பி.ஐ., களமிறங்கியதை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு அலுவலகம் செயல்பட்டு வந்த, பொதுப்பணி துறைக்கு சொந்தமான திட்ட அலுவலகத்தில் இருந்து டேபிள், சேர்களை, லாரியில் போலீசார் எடுத்து சென்றனர். லாரிக்கு பின்னால், சிறப்பு புலனாய்வு குழு ஏ.டி.எஸ்.பி., திருமால், ஆயுதப்படை போலீசார் ஒருவருடன் பைக்கில் புறப்பட்டு சென்றார். எரிந்த நிலையில் 'பென் டிரைவ்' கரூர் - வெள்ளியணை சாலையில் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்தில், கடந்த சில தினங்களாக பயன்படுத்தப்பட்ட ஆவண நகல்களை போலீசார் தீ வைத்து எரித்துள்ளனர். அதில், பாதி எரிந்த நிலையில், 32 ஜி.பி., கொண்ட 'பென் டிரைவ்' இருந்தது. இது குறித்து, செய்தியாளர்கள் பரபரப்பாக பேசியதை அறிந்ததும், சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் வேகமாக வந்து, அந்த பென் டிரைவை எடுத்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை