நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய 3 குழுக்களை நியமித்தது மத்திய அரசு
சென்னை:தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மூன்று குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. நடப்பு சீசனில், 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில், தற்போது, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது. இதனால், மழையில் நனைந்து நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசிடம் தமிழக அரசு சில தினங்களுக்கு முன் அனுமதி கேட்டது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு குழு அமைத்துள்ளது. மத்திய உணவுத்துறையைச் சேர்ந்த துணை இயக்குநர் தலைமையில், மூன்று பேர் அடங்கிய இரு குழுக்கள், உதவி இயக்குநர் தலைமையில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ள அதிகாரிகள், அடுத்த சில தினங்களில் டெல்டா மாவட்டங்களுக்கு வந்து, மூன்று குழுக்களாக பிரிந்து நெல் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்திற்கு எடுத்து சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இக்குழு அளிக்கும் பரிந்துரையின்படி, நெல் கொள்முதலுக்கு நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு முடிவு எடுக்கும்.