செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் ஆக., 18ம் தேதியே மத்திய அரசு அனுமதி
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்; மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். தஞ்சையில் அவர் அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. எனவே, விவசாயிகள் நெல்லை சாலைகளில் கொட்டி வைத்து, 20 நாட்களாக காவல் இருக்கின்றனர். தொடர் மழையால் சாலையில் கொட்டி வைத்த நெல்மணிகள் எல்லாம் முளைத்துள்ளன. நேற்று காலையிலிருந்து மதியம் வரை, பல இடங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்தேன். விவசாயிகளின் துன்பங்களையும், கண்ணீர் விட்டு அழும் காட்சியையும் தான் பார்க்க முடிந்தது. தஞ்சை மாவட்டம் காட்டூரில், 5,000 மூட்டைகளை எடை போட்டு கிடங்கில் வைத்துள்ளனர்; இன்னும், 4,000 மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் சாலையோரமாக குவித்து வைத்துள்ளனர். தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்தில் கிடங்கில் வைக்காமல், 6,000 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 7,500 மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளனர்; 8,000 மூட்டைகளை குவித்து வைத்துள்ளனர். வரும் வழியில் ஐந்து இடங்களை பார்த்தோம். தினமும், 800 முதல் 900 மூட்டைகள் தான் எடை போடுகின்றனர் . கடந்த 10 நாட்களாக எடை போடவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், 'ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, லாரிகளில் கிடங்குகளுக்கு எடுத்து சென்றால் தான் கொள்முதல் செய்ய முடியும். கொள்முதல் செய்தால் வைப்பதற்கு இடமில்லை' என்கின்றனர். இது குறித்து, சட்டசபையில் நான் கேட்டபோது, நேரடியாக சென்று பார்த்ததாக உணவு அமைச்சர் சமாளித்தார். 'செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசிடம் அனுமதி கிடைக்கவில்லை; அதனால் தான் முழுமையாக கொள்முதல் செய்யவில்லை' என்று தவறான கருத்தை சொல்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 18ம் தேதியே மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது. இதுகூட தெரியாமல், அமைச்சர் சட்டசபையில் தவறான தகவலை கூறியிருக்கிறார். டெல்டாவில் எவ்வளவு குறுவை சாகுபடி என்று கணக்கிட்டு, அதற்கு தக்கவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, அரசு எடுக்கவில்லை. விவசாயிகளின் நஷ் டத்தை எல்லாம் அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 7ம் தேதியே பிரச்னையை நான் சுட்டிக்காட்டினேன். அப்போதே வேகமாகச் செயல்பட்டிருந்தால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.