உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஏர்போர்ட் 16 மணி நேரம் மூடல் தரையிறங்க முடியாமல் விமானங்கள் திணறல்

சென்னை ஏர்போர்ட் 16 மணி நேரம் மூடல் தரையிறங்க முடியாமல் விமானங்கள் திணறல்

சென்னை:புயல் காரணமாக, சென்னை விமான நிலையம் நேற்று பகல் 12:00 முதல் இரவு 7:00 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது.நேற்று அதிகாலை 12:00 முதல் காலை 8:00 மணி வரை, விமான சேவையில் பாதிப்பு இல்லாமல் இருந்தது. பின், தரைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ய துவங்கியது. இதனால், காலை 8:10 மணி அபுதாபி, 8:15 மணி துபாய் விமானம், 8:55 மணி பெங்களூரு விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன. பின், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

திருப்பி விடப்பட்டன

இதையடுத்து, 'இண்டிகோ' நிறுவனத்தின் திருச்சி, மதுரை, ராஜமுந்திரி, இலங்கை யாழ்ப்பாணம், துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் சிறிய ரக, 18 விமானங்கள் முழுதும் ரத்து செய்யப்பட்டன. மேலும், தரையிறங்குவதில் சிக்கல் நீடித்ததால், அபுதாபியில் இருந்து காலை, 8:30 மணிக்கு வந்த, 'எத்தியாட்' விமானம், துபாயில் இருந்து காலை 8:15 மணிக்கு வந்த, 'எமிரேட்ஸ்' விமானமும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.துாத்துக்குடியில் இருந்து காலை, 9:25க்கு வந்த விமானம் திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காலை 8:40க்கு வந்த விமானம் மீண்டும் திருச்சிக்கும் திருப்பி விடப்பட்டன. இதே போல, காலை 10:00க்கு கோவையில் இருந்து சென்னை வந்த, 'பிட்ஸ் ஏர்' விமானமும் மீண்டும் கோவைக்கே திருப்பி விடப்பட்டது.காலை 10:10 மணிக்கு அந்தமானில் இருந்து வந்த விமானம், டில்லியில் இருந்து காலை 9:00 மணிக்கு வந்த விமானமும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. காலை 8:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும், 110க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

தற்காலிக மூடல்

புயல் மற்றும் கனமழை எதிரொலியாக, நேற்று பகல் 12:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை, சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால், பயணியர் வெளியே செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இண்டிகோ நிறுவனத்தின் அனைத்து சேவைகளும், நேற்று காலை 8:30 மணி முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்கூட்டியே தகவல் தராததால், விமான நிலையத்தில் பயணியர் காத்திருந்தனர்.சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால், இலங்கை பயணியர் அனைவரும் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !