உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோஷ்டி பூசலால் கலகலக்கும் சென்னை தி.மு.க., தொகுதி மாற வேண்டிய நெருக்கடியில் உதயநிதி

கோஷ்டி பூசலால் கலகலக்கும் சென்னை தி.மு.க., தொகுதி மாற வேண்டிய நெருக்கடியில் உதயநிதி

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகியின் ஆதிக்கத்தால், 10 கவுன்சிலர்கள், நான்கு பகுதி செயலர்கள், 10 வட்ட செயலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளதால், கட்சி பணிகளில் ஆர்வம் காட்டாமல், பலரும் ஒதுங்கி உள்ளனர். இதனால், தொகுதி மாற வேண்டிய நெருக்கடி, உதயநிதிக்கு ஏற்படலாம் என்கிறது, ஆளும் கட்சி வட்டாரம்.சமீபத்தில், சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி, 'அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 17 மாதங்களே உள்ளன. 2024 லோக்சபா தேர்தல், 'செமி பைனல்' தான். வரும் 2026 சட்டசபை தேர்தல் தான், 'பைனல் கேம்'. அதில் நாம், 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்' என்றார். அதைத் தொடர்ந்து, அவர் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் வாயிலாக, சிறப்பாக செயல்படும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு, வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவும் உதயநிதி திட்டமிட்டுள்ளார். சட்டசபை தொகுதி வாரியாக, அதுபோன்ற நிர்வாகிகள் யார் என்பதையும், அவர் ரகசியமாக தேர்வு செய்து வருகிறார்.இந்த சூழலில், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வில், கோஷ்டி பூசல் பெரிய அளவில் வெடித்துள்ளதால், அறிவாலயத்தில் தினமும் புகார்கள் குவிந்து வருகின்றன.இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:சென்னை மேற்கு மாவட்டத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, அண்ணாநகர், ஆயிரம்விளக்கு ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளன. அம்மாவட்ட நிர்வாகியின் ஆதிக்கம், பெரியண்ணன் போக்கு, கட்சியினரை அரவணைத்து செல்ல மறுப்பு போன்ற செயல்களால், கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்கள் அதிருப்தி அடைந்து ஒதுங்கி உள்ளனர். சில நிர்வாகிகள் விஜய் கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த மூன்று தொகுதிகளை சேர்ந்த 10 கவுன்சிலர்கள், நான்கு பகுதி செயலர்கள், 10 வட்ட செயலர்கள், மாவட்ட முக்கிய நிர்வாகியின் செயல்பாடுகளை பிடிக்காமல் உள்ளனர். இதனால், மூன்று சட்டசபை தொகுதிகளிலும் மாவட்ட புள்ளிக்கு எதிராக, கோஷ்டிகள் முளைத்துள்ளன. காங்கிரசுக்கு இணையாக, இம்மாவட்டத்தில் தி.மு.க., கோஷ்டிகள் செயல்படுகின்றன.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் மதன்குமார், ஆயிரம்விளக்கில் எம்.எல்.ஏ., எழிலன், அண்ணாநகரில் எம்.எல்.ஏ., மோகன் ஆகியோருக்கு எதிரான மோதல் போக்கு தான், இப்பிரச்னைக்கு காரணம். துணை முதல்வரின் காரில் ஏறி செல்லும் வகையில் நெருக்கமாக இருப்தால், மாவட்ட புள்ளி இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை; கட்சியினரை மதிப்பதும் இல்லை. வரும் சட்டசபை தேர்தலில், ஆயிரம்விளக்கு அல்லது அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட, மாவட்ட நிர்வாகி விரும்புகிறார். இதனால், ஆயிரம் விளக்கு தொகுதியில் கோஷ்டி பூசலை வளர்த்து, அரசியல் செய்வதாக சொல்லப்படுகிறது.உட்கட்சி கோஷ்டி பூசலுக்கு, உதயநிதி உடனடி தீர்வு காணாவிட்டால், வரும் தேர்தலில் அவர் தொகுதி மாற வேண்டிய நெருக்கடி ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை