அவசர கதியில் முதல்வர் மருந்தகம் தினகரன் கண்டனம்
சென்னை:'அவசர கதியிலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும், திட்டங்கள் துவக்குவதை நிறுத்திவிட்டு, அம்மா மருந்தகங்கள் போன்ற மக்கள் ஆதரவு பெற்ற திட்டங்களை, தொடர்ந்து நடத்த, முதல்வர் முன்வர வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட, ஒரே மாதத்திற்குள், மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. முதல்வர் அறிவித்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து, அவசர கதியில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.இவற்றில், மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. ஏழை மக்களுக்கு, தரமான மருந்துகளை, மலிவான விலையில் வழங்க வேண்டும் என்பதற்காக, ஜெயலலிதா அம்மா மருந்தகங்களை துவக்கினார்.அவற்றை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து, அதையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது, தி.மு.க., அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.எனவே, இனியும் அவசரகதியிலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும், திட்டங்கள் துவக்குவதை நிறுத்திவிட்டு, அம்மா மருந்தகங்கள் போன்ற, மக்கள் ஆதரவு பெற்ற திட்டங்களை, தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.