உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரைவேக்காட்டு விமர்சனம் என்கிறார் முதல்வர்; பொம்மை என்பது நிரூபணம் என்கிறார் இ.பி.எஸ்.,

அரைவேக்காட்டு விமர்சனம் என்கிறார் முதல்வர்; பொம்மை என்பது நிரூபணம் என்கிறார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'செய்தித் தாள்களைக் கூட படிக்காமல் அரைவேக்காட்டுத்தனத்தோடு என்னை விமர்சிக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி' என தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அதற்கு, 'முதல்வர் ஸ்டாலின், 'நாட்டில் மும்மாரி பொழிகிறது; எல்லாரும் என்னைப் பாராட்டுகின்றனர்' என்கிற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்' என பதிலடி கொடுத்திருக்கிறார் பழனிசாமி.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு:

சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. தமிழகத்துக்கு, காவிரி நீரைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது தி.மு.க., தான்.மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதை, எனக்கு அவர்கள் கொடுக்கும் வரவேற்பு வெளிப்படுத்துகிறது. இதை எல்லாம் பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புலம்பி கொண்டு இருக்கிறார். தன்னுடைய உட்கட்சி பிரச்னையையும், கூட்டணி பிரச்னைகளையும் மறைப்பதற்காகவே, இன்றைக்கு அரசியல் ரீதியில் அறிக்கை வெளியிட்டு, தனக்கு புகழ் தேடிக் கொண்டிருக்கிறார்.தமிழகத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலனளிக்கும் வகையில் ஏராளமான திட்டங்கள் தி.மு.க., அரசு செயல்படுத்தி இருக்கிறது. நான் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டம் வாயிலாக, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினேன். அந்த மனுக்களெல்லாம் என்ன ஆனது என பழனிசாமி, இப்போது கேட்கிறார்.ஒவ்வொரு நாளும், அரசு தரப்பில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும், அரசு சார்பில் பத்திரிகை செய்தியாகக் கொடுக்கிறோம். மறுநாள் எல்லா செய்தித்தாள்களிலும் வருகிறது. அதையெல்லாம் தெரிந்து கொள்ள மாட்டேன்; படிக்க மாட்டேன் என அடம் பிடிக்கும் பழனிசாமி, எதையுமே தெரிந்து கொள்ளாமல், அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை விட்டு என்னை கேள்வி கேட்கிறார்.'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' அறிவிப்பு வாயிலாக பெறப்பட்ட, 4.57 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தனித் துறை உருவாக்கப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த விபரம் அறியாத பழனிசாமி, ஸ்டாலின் வைத்த பெட்டியின் சாவி தொலைந்து விட்டதா என கேட்கிறார். பழனிசாமியின் நினைப்பு எப்போதுமே பெட்டியில் தான் இருக்கிறது.நாளும் பொழுதும்; அல்லும் பகலுமாக மக்கள் குறை தீர்க்கும் நம்முடைய அரசு செயல்பாடுகளை பார்த்து பழனிசாமிக்கு வயிறு எரிகிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பழனிசாமி அறிக்கை:

தி.மு.க., ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள், முதல்வர் ஸ்டாலினை மிகவும் உறுத்துகின்றன போல; அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறதாம் அவருக்கு. அரைவேக்காட்டுத்தனம் என்பது எது தெரியுமா? ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், 'நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த 'ரீல்'களை அளந்து விடுகிறீர்களே, அது தான் அரைவேக்காட்டுத்தனம்.தஞ்சையில் உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை, குண்டுக்கட்டாக உங்கள் காவல் துறை கைது செய்துள்ளது. இது என்ன மாடல்; பாசிச மாடல் தானே? 'மீத்தேன், ஹைட்ரோ கார்பன்' திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப்படுத்தவில்லை.நான் செய்தித்தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? 'முரசொலி' தவிர, எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதல்வர். 'நாட்டில் மும்மாரி பொழிகிறது; எல்லாரும் என்னைப் பாராட்டுகின்றனர்' என, மாய உலகில் வாழும் முதல்வர் ஸ்டாலினை மீட்க வழியே இல்லை.நாள்தோறும் நடக்கும் சட்டம் -ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித்தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப்போனால் ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் என் கருத்துகளை தெரிவிக்கிறேன். எல்லா திட்டங்களிலும், 'கமிஷன்' கணக்கு போட்டு, பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களின், 'பெட்டி' மோகத்தை, என் பக்கம் திருப்ப வேண்டாம்.உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று, உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா? 'ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்' என்ற என்னுடைய கூற்றை, ஸ்டாலின் மீண்டும் மெய்ப்பித்து விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

புரொடஸ்டர்
ஜூன் 18, 2025 08:56

வேகாத விமர்சனங்கள் செய்துகொண்டு காலம் தள்ளுகிறாே ஈபிஎஸ்???


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 07:22

முதலில் நம் முதல்வர் செய்தி தாள்களை படிப்பாரா, ஏனென்றால் .. பூனைமேல் மதில், பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் உருண்டோடும், யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே, சும்மா கிடந்த ஆண்ட்டியை ஊதி கெடுத்ததாம் சங்கு, கொள்முதல்நெல் நெல்முதல்கொள், ராஜீவ் காந்தி இப்போது உயிரோடு இருந்திருந்தால் அவரை கொன்றவர்களை மன்னித்திருப்பார் .. இப்படி எல்லாம் பார்த்து தப்பு தப்பாக படிப்பார் ?


Perumal Pillai
ஜூன் 17, 2025 19:17

நீயும் பொம்மை . நானும் பொம்மை .


theruvasagan
ஜூன் 17, 2025 17:32

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள். ஆமாம். அப்பா குடும்பம் அம்மா குடும்பம் மகன் குடும்பம் மகள் குடும்பம் மருமகன் குடும்பம் அமைச்சர்கள் குடும்பம் உறுப்பினர்கள் குடும்பம் என்கிற பல்வேறு குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் நன்றாகவே பயனளிக்கின்றன. ஆனாலும் பாவப்பட்ட உபிக்களுக்கான பலன் மட்டும் 200ஐ தாண்டாது.


Rajasekar Jayaraman
ஜூன் 17, 2025 17:19

இரண்டுமே அரைவேக்காடுகளின் மொத்த உருவமே.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 07:25

சரி யார் கால் வேக்காடு, அரைவேக்காடு, முக்கால் வேக்காடு, முழு வேக்காடு என்று நேருக்கு நேர் பேசவைத்து பார்த்துவிடுவோமா ?


சமீபத்திய செய்தி