உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெல்டாவில் என்ன நடக்கிறது என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை

டெல்டாவில் என்ன நடக்கிறது என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை

சென்னை: 'டெல்டா மாவட்டங்களில் என்ன நடக்கிறது என்பதே, முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: டெல்டா மாவட்டங்களுக்கு சென்று, விவசாயிகளின் துயரத்தையும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே நெல் குவிக்கப்பட்டு முளைத்திருப்பதையும் பார்த்தேன். விரைந்து நிவாரணம் வழங்க வலியுறுத்தினேன். ஆனால், 'நான் பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். துாக்கம் வேளாண் துறை அமைச்சர், '6,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் பாதிப்படைந்துள்ளது' என்கிறார். உணவுத்துறை அமைச்சர், 'நெல் கொள்முதல் செய்ய, தாமதம் ஏற்பட்டதற்கு மத்திய அரசே காரணம்' என்கிறார். கும்பகர்ண ----------------துாக்கத்தில் இருந்த தி.மு.க., அரசு, இப்போது, 150க்கும் அதிகமான அதிகாரிகளை, டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பி உள்ளது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை கூட அறிந்து கொள்ளாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். டெல்டா மாவட்டங்களுக்கு சென்று, விவசாயிகளின் உண்மை நிலையை வெளிப்படுத்தி விட்டேன் என்பதால், தி.மு.க., அமைச்சர்களுக்கு ஆத்திரம் வருகிறது. வேளாண் துறை அமைச்சர், 'அ.தி.மு.க., ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு முளைத்த நெல்மணிகள், இப்போது சிறியதாகவே முளைத்துஉள்ளன' என்கிறார். நெல் சிறிதளவு முளைத்தால் என்ன; நாற்று நடும் அளவுக்கு முளைத்தால் என்ன? நெல் முளைத்து விட்டாலே அது வீண் தான். விவசாயிகளை கேவலப்படுத்தும் வகையில் அமைச்சரின் பதில் உள்ளது. குறுவை கொள்முதல் காலங்களில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதும் தெரியும். இவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு, நெல் கொள்முதலில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதுடன், அதிக அளவு வரும் நெல்லை சேமிக்க, தற்காலிக கிடங்குகளை அமைத்து, விவசாயிகள் எடுத்து வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்திருக்க வேண்டும். கற்பனை உலகம் முதல்வரும், அமைச்சர்களும், ஒரு பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கின்றனர். மக்கள் சுபிட்சமாக இருக்கின்றனர் என, தங்களுக்கு தாங்களே சொல்லிக்கொண்டு கனவு உலகத்தில் வாழும் இவர்களை நம்பி, விவசாயிகளும், மக்களும் தான் ஏமாறுகின்றனர். இனியாவது தி.மு.க., அரசு விழித்துக்கொண்டு, விவசாயிகள் விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். நெல் பாதிப்பை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ