உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சட்டசபையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது:வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை, தமிழக அரசு பெற்றுள்ளது. சட்டசபையில் நாம் நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த, பல முக்கியமான சட்ட முன்வடிவுகளுக்கு, ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். அவற்றை நாம் மீண்டும் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறையாக நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என, அரசியல் சட்டம் வரையறுத்துள்ள போதிலும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தி வந்ததுடன், தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. தமிழக அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, 'சட்ட முன்வடிவுகளை கவர்னர் நிறுத்தி வைத்திருந்தது சட்ட விரோதமானது. 'அந்த சட்ட முன்வடிவுகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்பட வேண்டும்' என தெரிவித்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.இந்த தீர்ப்பு, தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசு களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. தி.மு.க.,வின் உயிர் கொள்கையான, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவம் போன்றவற்றை நிலைநாட்ட, தமிழகம் போராடியது; தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - பா.ஜ., தவிர்த்து, மற்ற கட்சி தலைவர்கள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தும், தீர்ப்பை வரவேற்றும் பேசினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் பேசுகையில், ''எதிர்க்கட்சியாக இருக்கிற அ.தி.மு.க., மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ., தவிர, மற்ற கட்சி தலைவர்கள் தீர்ப்பை வரவேற்று மகிழ்ந்துள்ளனர். நமது அரசியல்அமைப்பு சட்டத்தில், மாநில சட்டசபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை நிலைநாட்டியதற்கு, தமிழக அரசு சார்பிலும், அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பிலும், உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ