உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் தீர்மானம் கண்துடைப்பு நாடகம் * அ.தி.மு.க., உதயகுமார் கண்டனம்

முதல்வர் தீர்மானம் கண்துடைப்பு நாடகம் * அ.தி.மு.க., உதயகுமார் கண்டனம்

சென்னை;''மாநில சுயாட்சி மீது உண்மையிலேயே தி.மு.க.,வுக்கு அக்கறை இருந்தால், மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்திருந்தபோது, அதை நிறைவேற்றி இருக்க வேண்டும். அதை செய்யாமல், தற்போது குழு அமைப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது, கண்துடைப்பு நாடகம்,'' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த பின், சட்டம்-ஒழுங்கு உட்பட பல பிரச்னைகளை, எதிர்க்கட்சி தலைவர் எழுப்பும்போது, சபாநாயகர் வாய்ப்பு அளிப்பதில்லை. சபையில் அனைவரும் எழுந்து நின்று, அமைச்சர்கள் மீது நம்பிக்கையின்மை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதிக்க கோரிக்கை வைத்தோம். அமைச்சர் நேரு, அவரது மகன், அவரது சகோதரருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. எனவே, நேரு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினோம். அமைச்சர் பொன்முடி, ஹிந்து மதத்தை, பெண்களுடன் இணைத்து அவதுாறாகப் பேசியதால், அவர் பதவியேற்பு உறுதிமொழியை மீறியுள்ளார். அதனால், அவர் மீது நம்பிக்கையின்மை தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுக்கப்பட்டது.அமைச்சர் செந்தில் பாலாஜி வசமுள்ள, 'டாஸ்மாக்' தலைமையகம் மற்றும் மதுபான ஆலைகளில் சோதனை நடத்தி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அவர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கடிதம் கொடுக்கப்பட்டது. இது குறித்து பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரினோம்; சபாநாயகர் அனுமதி மறுத்தார். பெண்களை தெய்வமாக மதிக்கும் இனம் தமிழர் இனம். நாகரிகத்தை சிதைக்கும் வகையில், அமைச்சர் பொன்முடி பேசி இருப்பது, பெண்களை கொச்சைப்படுத்தும் செயலாக உள்ளது. இன்னும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காத முதல்வரை கண்டிக்கிறோம். அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது குறித்து, சபையில் விவாதிக்க, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்.கருணாநிதி 50 ஆண்டுகளுக்கு முன், இதே சட்டசபையில் மாநில சுயாட்சி குறித்து, தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதன்பின், 16 ஆண்டுகள் மத்தியில், மாநிலத்தில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தனர். அப்போது ஏற்படாத ஞானோதயம், இப்போது ஏற்பட்டுள்ளது.கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து, மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்றது காங்கிரஸ். அப்போது, தி.மு.க., மவுனமாக இருந்தது. இப்போது, இந்த அரசு மக்கள் மீது கோபத்தில் உள்ளனர். அதை மடைமாற்றம் செய்ய, 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த தீர்மானத்தை, சபையில் முதல்வர் முன்மொழிந்துள்ளார்.தமிழக சட்டசபையில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் கண்துடைப்பு நாடகம். மாநில சுயாட்சி மீது உண்மையிலேயே, தி.மு.க.,வுக்கு அக்கறை இருந்தால், மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்திருந்தபோது, அதை நிறைவேற்றி இருக்கலாம். தற்போது மக்களை தி.மு.க., ஏமாற்றுகிறது. இது முழுக்க ஏமாற்று வேலை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ