உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிளகாய் பொடி வெங்கடேசன் தமிழக பா.ஜ.,விலிருந்து நீக்கம்

மிளகாய் பொடி வெங்கடேசன் தமிழக பா.ஜ.,விலிருந்து நீக்கம்

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி 'மிளகாய் பொடி' வெங்கடேசன், தமிழக பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக பா.ஜ.,வில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி செயலராக வெங்கடேசன் உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியை சேர்ந்த இவர் மீது, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணமோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் தீபன் சக்ரவர்த்தி. இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'பானாசோனிக்' நிறுவனத்தில், துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், பாடியநல்லுாரைச் சேர்ந்த கணபதிலால் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடைக்கு, 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் சாதன பொருட்களை வினியோகம் செய்துள்ளார்.மேலும், திருமுல்லைவாயிலை சேர்ந்த கோகுலவாசன் என்பவரும், கணபதிலால் கடைக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கி உள்ளதாக தெரிகிறது. ஆனால், கணபதிலால் பொருட்களுக்கான பணத்தை வழங்கவில்லை. அவரிடமிருந்து பணத்தை வாங்க, பாடியநல்லுாரை சேர்ந்த பா.ஜ., நிர்வாகி 'மிளகாய் பொடி' வெங்கடேசன், 51, என்பவரிடம், தீபன் சக்ரவர்த்தி, கோகுலவாசன் உதவி கேட்டுள்ளனர். இதற்கு கமிஷனாக, கோகுலவாசனிடம், 8 லட்சம் ரூபாயும், தீபன் சக்ரவர்த்தியிடம், 12 லட்சம் ரூபாயும் வெங்கடேசன் கேட்டுள்ளார். முதலில், ஒரு லட்சம் ரூபாய் 'அட்வான்ஸ்' கேட்டுள்ளார். அந்த பணத்தை தீபன் சக்ரவர்த்தி கொடுத்துள்ளார். வெகு நாட்களாகியும் பணத்தை வாங்கி தராத நிலையில், தீபன் சக்ரவர்த்தி அட்வான்ஸ் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதற்கு கோகுலவாசன், வெங்கடேசன் மற்றும் கணபதிலால் சேர்ந்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஏமாற்றப்படுவதை உணர்ந்த தீபன் சக்ரவர்த்தி, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.செங்குன்றம் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, வெங்கடேசன், 51, கணபதிலால், 45, கோகுலவாசன், 42, ஆகிய மூவரையும், நேற்று முன்தினம் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த வாரம் மதுரை வந்தார். அவரை வெங்கடேசன் சந்தித்தார். இந்த புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று வெங்கடேசன் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை பா.ஜ.,வில் இருந்து நீக்கி, அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mahendran Puru
ஜூன் 17, 2025 18:47

இவரை ஏன் நயினார் நீக்கினார்? 2026ல் எப்படி ஆட்சி அமைப்பது?


Bahurudeen Ali Ahamed
ஜூன் 16, 2025 12:29

பெயரே ஒரு தினுசா இருக்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை