மேலும் செய்திகள்
தேசிய திருநங்கைகள்தினம் கொண்டாட்டம்
16-Apr-2025
உளுந்துார்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பூசாரிகளின் கைகளால், தாலி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.நேற்று காலை 8:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், ஒன்றிய சேர்மன்கள் சாந்தி இளங்கோவன், ராஜவேல், துணை சேர்மன் ராமலிங்கம், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் டேனியல்ராஜ் ஆகியோர் வடம் பிடித்து, துவக்கி வைத்தனர். திருநங்கைகள் மற்றும் திரளான பக்தர்கள் தேரினை இழுத்து சென்றனர்.கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த விளைபொருட்கள் மற்றும் சில்லரை காசுகளை சுவாமி மீது வீசி வழிபட்டனர். தேர் செல்லும் பாதையில் திருநங்கைகள் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி கும்மியடித்து வழிபட்டனர்.தேர் பந்தலடியை அடைந்த பிறகு, அழுகளம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து, வெள்ளை புடவை கட்டி விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்தனர். நீராடிய பிறகு, ஊருக்கு புறப்பட்டனர்.மாலை 5:00 மணிக்கு 'உறுமை சோறு' படையல் நடந்தது. இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் பக்தர்கள் அதை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இரவு 7:00 மணிக்கு காளி கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது.இன்று விடையாற்றி உற்சவம், நாளை தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.தேரோட்டத்தையொட்டி உளுந்துார்பேட்டை, விழுப்புரம், கடலுார், திருக்கோவிலுார், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 1,150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
16-Apr-2025